கோவை: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் தமிழ்நாடு தெற்கு சார்பில் ஸ்ரீ சத்யசாய்பாபாவின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கோவையில் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ சத்யசாய்பாபாவின் பிறந்தநாள் விழா, ரேஸ்கோர்ஸ் வெஸ்ட் கிளப் சாலையிலுள்ள ஸ்ரீ சத்யசாய் மந்திரில் நடந்தது. காலை சுவாமிக்கு 5:15 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் பக்தர்களின் நகரசங்கீர்த்தனம் நடந்தது. இதில் பக்தர்கள் குழுக்கள் குழுக்களாக சத்யசாய் பஜன் பாடல்களை பாடியவாரு இசைக்கருவிகளைக்கொண்டு இசைத்தும் வந்தனர். சிலர் கைகளில் தாளம் போட்டு மெய்மறந்து நடந்து வந்தனர். 7 மணிக்கு பிரசாந்தி கொடியேற்றமும், உலகநலன்கருதி 7:30 மணிக்கு சிறப்பு ஹோமங்களும், சிறப்பு ஆராதனைகளும் நடந்தது. 12 மணிக்கு மஹா நாராயண சேவா, மாலை 5 மணிக்கு வேதபாரயணம், ஸ்ரீ சத்திய சாய் பஜன், மங்களஹாரத்தி, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தது. பகல் 10:30 மணிக்கு குப்பனுார், செல்லப்பகவுண்டன்புதுார், வடவள்ளி ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம்களும், மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்களும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆர்.எஸ்.புரத்திலுள்ள ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதியில் சதவர்ஷ மஹோத்ஸவம் மற்றும் நுாறாவது பிறந்த நாள் நிகழ்ச்சி மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரல் படி நடந்தது. மாலை 5 மணிக்கு வேதபாராயணம், சாய்பஜன், பாலவிகாஷ் கலாச்சார நிகழ்ச்சி சிறப்பு இசை நிகழ்ச்சிகள் நடந்தது. திரளான பக்தர்களும் பொதுமக்களும் பங்கேற்று இசை நிகழ்ச்சிகளிலும் ஹோமங்களும் பங்கேற்ற சுவாமியின் அனுக்கிரஹத்தை பெற்றனர்.