திருவொற்றியூர்: ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு வைபவம் நாளை நடைபெற உள்ளது.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலின் மூலவர் புற்று திருமேனியான ஆதிபுரீஸ்வரர், ஆண்டு முழுதும், தங்க முலாம் பூசிய நாக கவசம் அணிந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, மூன்று நாட்கள் மட்டுமே ஆதிபுரீஸ்வரர் திருமேனி மீது அணிவிக்கப்பட்டிருக்கும், நாக கவசம் திறக்கப்பட்டு, மூன்று நாட்களுக்கு புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடக்கும். அதன்படி, நாளை மாலை 6:00 மணிக்கு, கவசம் திறக்கப்பட்டு, முதல் கால தைலாபிஷேகத்துடன் வைபவம் துவங்கும். தொடர்ந்து, 5, 6 ஆகிய தேதிகளில், நாள் முழுதும் ஆதிபுரீஸ்வரரை தரிசிக்க முடியும். பக்தர்களை வரவேற்கும் விதமாக, தேரடி – சன்னிதி தெரு நுழைவாயிலில், கும்பகோணம் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. உத்சவத்தின் நிறைவாக, 6ம் தேதி இரவு 9:00 மணிக்கு அர்த்தஜாம பூஜைக்கு பின், ஆதிபுரீஸ்வரர் திருமேனி மீது, கவசம் சாத்தப்படும்.