சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
பாரி ஆண்ட பறம்புமலையாம் திருக்கொடுங்குன்றம் எனும் பிரான்மலை அடிவாரத்தில் மூன்று நிலைகளில் சிவனும் பார்வதியும் கோயில் கொண்டுள்ளனர். ஆகாயத்தளத்தில் மங்கைபாகர் தேனம்மை, பூமி தளத்தில் காசி விஸ்வநாதர் விசாலாட்சி, பாதாளத்தில் திருக்கொடுங்குன்றநாதர் குயிலமுதாம்பிகை ஆக அருளாட்சி புரிகின்றனர். 2500 அடி உயர இம்மலை உச்சியில் விநாயகரும் பாலமுருகனும் கோயில் கொண்டுள்ளனர். இன்று இங்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி கொப்பரைக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கார்த்திகை தீபக்குன்றில் கொப்பரை பிரதிஷ்டை செய்யப்பட்டு மாலை 4:00 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அருகே உள்ள முருகன் குன்றிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அடிவாரக்கோயிலில் ஐந்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டு மயில்வாகனத்தில் சுப்பிரமணியர் வீதி உலா வந்தார். முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி லட்சதீபம் ஏற்றப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அம்பாள் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவபுரிபட்டி சுயபிரகாச ஈஸ்வரர், சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர், கரிசல்பட்டி கைலாசநாதர், உலகம்பட்டி உலகநாதர் கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. சேவுகப்பெருமாள் ஐயனார் உள்ளிட்ட கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.