ஆமதாபாத் : சோம்நாத் கோவிலில் பறக்கும் கொடி இந்தியாவின் வலிமையைக் காட்டுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோவில் மீது ஆயிரத்து இருபத்து ஆறாம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கஜனி முகமது தாக்குதல் நடத்தி , ஏராளமான செல்வங்களை கொள்ளையடித்து சென்றார் . அதன் பின் , முகலாய ஆட்சியாளர்களால் பலமுறை கோவில் தாக்கப்பட்டது . இந்த தாக்குதல்களுக்கு பின் , ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் சோம்நாத் கோவில் கம்பீரமாக நிற்கிறது.
இதை நினைவு கூரும் வகையில் சோம்நாத் பெருமித திருவிழா நடக்கிறது . இதையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது . இதனால் மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத் சென்றார் . கோவிலில் நேற்றிரவு அவர் சாமி தரிசனம் செய்தார். இன்று நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்க திறந்த வாகனத்தில் சென்ற பிரதமர் மோடியை அங்கு கூடியிருந்த மக்கள் வரவேற்றனர் . கோவிலில் சிறப்பு வழிபாடுகளையும் பிரதமர் மோடி மேற்கொண்டார் . குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் , துணை முதல்வர் ஹர்ஷ் சங்வி உடன் இருந்தனர் . குஜராத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது : நமது முன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சோம்நாத் கோவிலுக்காக தங்களது உயிரை தியாகம் செய்தனர் . இந்த சூழ்நிலையும் , இந்த சந்தர்ப்பமும் தெய்வீகமானது . இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம் . நான் உங்களுடன் உரையாடும் போது எனக்கு மீண்டும் , மீண்டும் ஒரு கேள்வி எழுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் சூழல் எப்படி இருந்திருக்கும் . ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சோம்நாத் கோவிலில் கொடியேற்றப்பட்டு இருக்கிறது . இது இந்தியாவின் சக்தியையும் , திறன்களையும் முழு உலகிற்கு எடுத்துரைக்கிறது . கோவிலை அழித்ததன் மூலம் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாகப் படையெடுத்தவர்கள் நினைத்தார்கள். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் சோமநாதரின் கொடி கம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கிறது . இந்தியாவின் வலிமையைக் காட்டுகிறது . சோமநாதரின் கதை இந்தியாவின் கதை . அந்நியப் படையெடுப்பாளர்கள் இந்தியாவை பலமுறை அழிக்க முயன்றனர் . ஆனால் அவர்கள் தோல்வியடைந்தனர் . இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். டிரம்ஸ் வாசித்த மோடி: சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடியை வரவேற்க கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . டிரம்ஸ் வாசித்து வரவேற்ற கலைஞர்களை மோடி பாராட்டினார் . அவர்களுடன் இணைந்து சிறிது நேரம் டிரம்ஸ் வாசித்து மகிழ்ந்தார் . இதனை கண்ட இசை கலைஞர்கள் உற்சாகம் அடைந்தனர்