பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் புண்ணியத்தைத் தேடி, கும்பமேளாவிற்கு வந்த பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பிப். 3ம் தேதி கும்பமேளா நிறைவடையும் வரை தினமும் காலையில் நிளா நதியில் புனித நீராட வாய்ப்புள்ளது. இன்று லஷ்மணன் தில்லங்கேரி தலைமையில் சூரிய கணபதி ஹோமமும் ஆச்சாரியார் ஜெயன் இளயத்தின் தலைமையில் சுக்ரித ஹோமமும் நடைபெற்றது. தொடர்ந்து காயத்ரி குருகுலத்தின் அருண் பிரபாகர் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க புனித நீராடல் நடைபெற்றது. பல்வேறு ஊர்களிலிருந்து வந்த பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.
தினமும் மாலை வாரணாசி தசாஸ்வமேத் காட் பண்டிதர்களின் தலைமையில் நிளா ஆரத்தி நடைபெற்று வருகிறது. ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டுள்ள யாகசாலைக்கு அருகில் இந்த ஆரத்தி நடத்தப்படுகிறது. கங்கை நதியை ஆராதிப்பதைப் போலவே பாரதப்புழா நதியை ஆராதிக்கும் விதமாகப் பல தட்டு விளக்குகளைக் கொண்டு இந்த ஆரத்தி எடுக்கப்படுகிறது. மோகன்ஜி பவுண்டேஷன் (Mohanji Foundation) மூலம் இந்தப் பண்டிதர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ரத யாத்திரை: கும்பமேளாவின் ஒரு பகுதியாகத் தமிழ்நாட்டின் திருமூர்த்தி மலையிலிருந்து புறப்பட்ட ரத யாத்திரை நேற்று மாலை திருநாவாயை வந்தடைந்தது. தேவதா சங்கல்பத்துடனான மகா மேரு இந்த ரதத்தில் கொண்டு வரப்படுள்ளது. இந்த ரத யாத்திரைக்குப் பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் வழங்கப்படவிருந்த வரவேற்புகளுக்குத் தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. பாலக்காடு வரை காவல்துறையின் பாதுகாப்புடன் வந்த இந்த ரதத்தை, கும்பமேளா கமிட்டியினர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வரவேற்பு முடிந்த, பின் நேற்று மாலை திருநாவாயவில் வந்தடைந்தது. நாளை முதல் சதுராம்பிகா பூஜை துவங்கும். பாரதப்புழை நதியைப் பாதுகாக்க பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காவல் தெய்வங்கள் சதுரம்பிகைகள். விழாவின் ஒரு பகுதியாகத் தினமும் காலையில் கணபதி ஹோமமும், மாலையில் பகவதி சேவையும் நடைபெற்று வருகின்றன. கும்பமேளா நடைபெறும் இடத்தில் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
தபால் துறையின் கங்கை நீர் விற்பனை மையம்: கும்பமேளாவை முன்னிட்டு கங்கை நீர் விற்பனைக்காக தபால் துறை சிறப்பு சிறப்பு மையம் திருநாவாயவில் அமைத்துள்ளது. கங்கோத்திரியில் இருந்து சேகரிக்கப்பட்டு, தபால் நிலையங்கள் மூலம் 30 ரூபாய்க்கு விநியோகிக்கப்படும் 250 மி.லி கங்கை நீர் பாட்டில்கள், கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களுக்காக திரூர் தபால் கோட்டம் அமைத்துள்ள இந்த மையத்திலிருந்து கிடைக்கும். கூடுதல் விவரங்களுக்கு 9188928320, 8590468653 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.