திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் நாளை காலை அஷ்டாங்க விமானத்தின் முதல்நிலைக்கான தங்க விமான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பிரசித்தி பெற்ற அஷ்டாங்க விமானத்தின் முதல் நிலைக்கு ஸ்ரீ சவுமியநாராயணன், ஸ்ரீ எம்பெருமானார் சாரிடபிள் ட்ர்ஸ்ட்,திருப்பணிக்குழு நிர்வாகிகள் உள்ளிட்டோரால் தங்க கவசத் திருப்பணி நடந்தது. விமானத்தின் முதல்நிலையில் உச்சியில் 1000 ஆண்டு பழமையான புராதன தங்கக் கலசத்தில் மீண்டும் தங்க கவசம் 6 அடுக்கில் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்து பத்மம், மகா பத்மம், மாலைக்கட்டு, கண்ணாடிச்சட்டம், பண்டியல், கர்ணக்கட்டு, நாசித்தலை, கர்ணக்கட்டு என்று 22.4 கிராம் வீதம் 1400 சதுர அடியில் 32 கிலோ அளவிலான தங்கத்தகடு 7 அடுக்கில் பதிக்கப்பட்டுள்ளது.
தற்போது திருப்பணி நிறைவடைந்ததை அடுத்து நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பட்டாச்சார்யார்களால் யாகசாலை பூஜை பிப்.2 முதல் நடந்து வருகிறது. நேற்று நான்கு,ஐந்தாம் கால யாக பூஜைகளும், இன்று காலை 7:00 மணிக்கு ஆறாம் கால யாகபூஜையும், காலை 11:30 மணிக்கு பூர்ணாகுதி, மாலை 4:00 மணிக்கு ஏழாம் கால யாகபூஜையும் இரவு 8:00 மணிக்கு பூர்ணாகுதியும் நடைபெறும். நாளை காலை 5:00 மணிக்கு புண்யாகவாசனம்,சிறப்பு ேஹாமம், காலை 8:00 மணிக்கு பூர்ணாகுதி தீபராதனை நடந்து பட்டாச்சார்யார்களால் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடு ஆகி விமானம் செல்கின்றன. தொடர்ந்து காலை 9:26மணி முதல் காலை 10:18 மணிக்குள் தங்க விமானத்திற்கான கும்பாபிஷேகம் நடைபெறும். ஏற்பாட்டினை சிவகங்கை சமஸ்தானத்தினர், கோயில் அனைத்து நிர்வாக கைங்கர்யஸ்தர்கள்,பட்டமங்கலம் நாட்டார், மயில்ராயன்கோட்டை நாட்டார் உள்ளிட்டோர் செய்கின்றனர்.