கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கடலுார், தேவனாம்பட்டினம் கடற்கரையில் மாசிமக திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சோலைவாழி மாரியம்மன், முதுநகர் முத்துமாரியம்மன், வண்டிப்பாளையம் மலைவாழியம்மன், சி.என்.பாளையம் முத்துமாரியம்மன் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட சுவாமிகள் காலை முதல், சிறப்பு அலங்காரத்தில் மேள தாளங்கள் முழங்க கடற்கரையில் எழுந்தருளினர். பின், சுவாமிகளுக்கு தீர்த்தவாரி, தீபாராதனை நடந்தது. குறிப்பாக, கங்கணாங்குப்பம் ஏழுகரக மாரியம்மன் சோளத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கடலில் குளிக்காமல் இருக்க போலீசார் தடுப்பு கட்டை அமைத்திருந்தனர். இருப்பினும் தடையை மீறி குளித்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏராளமானனோர் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய கார், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்றதால் புதுப்பாளையம் மெயின்ரோடு, பீச்ரோடு, வண்ணாரப்பாளையம் நான்குமுனை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார், போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இரண்டாம் நாளாக இன்று (3ம் தேதி) நடக்கும் மாசிமக தீர்த்தவாரியில் திருவந்திபுரம் தேவநாத சுவாமிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.