ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண அபிஷேக பூஜை நடந்தது.
நேற்று சந்திர கிரகணத்தையொட்டி அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5:00 முதல் 5:30 மணி வரை பூஜை நடந்தது. தொடர்ந்து கால, சாயரட்சை பூஜைகள் நடந்தன. மதியம் 1:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு, மாலை 5:30 மணிக்கு கோயிலில் இருந்து தீர்த்தவாரி சுவாமிகள் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினார். மாலை 6:22 மணிக்கு பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து வீதியுலா நடைபெற்று இரவு 8:00 மணிக்கு கிரகண அபிஷேக பூஜை நடந்தது. நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இரவு 9:00 மணிக்கு அர்த்தசாம பூஜை நடந்த பின் மீண்டும் நடை சாத்தப்பட்டது.