கண்ணகி கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நேரம் குறைப்பு



கூடலுார்: மங்கல தேவி கண்ணகி கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படும் நேரம் இந்த ஆண்டு குறைக்கப்பட்டு தேக்கடியில் நடந்த தேனி, இடுக்கி கலெக்டர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழக வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் கூடலுார் அருகே தமிழக -கேரள எல்லையான விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். கோயிலுக்கு செல்லும் ஜீப் பாதை கேரள வனப் பகுதி வழியாக இருப்பதால் விழா கொண்டாடுவதில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதில் எடுக்கப்படும் முடிவுகளின்படி விழா கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு மே 1ல் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங், இடுக்கி கலெக்டர் தினேஷன் சேருவாட் தலைமையில் நேற்று தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக மூங்கில் காடு கூட்ட அரங்கில் நடந்தது. இரு மாநில வனத்துறை, போலீஸ்துறை வருவாய்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்து துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு காலை 6:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை குமுளியில் இருந்து கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு அனுமதிக்கப்படும் நேரம் குறைக்கப்பட்டு காலை 6:00 மணியிலிருந்து மதியம் 1:45 மணி வரை மட்டுமே குமுளியில் அனுமதிக்கப்படும். மாலை 5:30 மணிக்கு கோயிலில் இருந்து திரும்பி விட வேண்டும். கடுமையான வெப்பம் நிலவுவதால் கூடுதலாக குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருவது, கோயில் வளாகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் அன்னதானம் வழங்குவது, குமுளியிலிருந்து கோயில் வரை செல்லும் 14 கி.மீ., தூர ஜீப் பாதை சீரமைப்பது, லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து கோயில் வரையுள்ள 6.6 கி.மீ., தூர மலைப்பாதையை சீரமைத்து குடிநீர் வசதி செய்து தருவது உள்ளிட்டவைகள் குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பக்தர்கள் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுவரவும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வரவும் தடை செய்யப்பட்டுள்ளது.

தரமான உணவு வழங்கப்படுமா: கோயில் வளாகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் விழா தினத்தன்று அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது உணவு கெட்டுப் போனதால் ஏராளமான பக்தர்கள் உணவின்றி சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த ஆண்டும் அது போன்ற பிரச்னை ஏற்படாமல் சிறந்த உணவு வழங்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். கலெக்டர் ரஞ்ஜீத் கூறும் போது, உணவு குமுளியில் வைத்து தயார் செய்யப்பட்டு இரண்டு டிரிப்பாக உணவை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவு தரமாக தயார் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்