காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழா காஞ்சி காமாட்சியம்மன் கோவிலிலும், சங்கர மடத்திலும் இன்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 71வது மடாதிபதியான சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு தீட்சை வழங்கி அட்சய திருதியையான இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து அதிகாலை 5:00 மணிக்கு இரு மடாதிபதிகளும் ஊர்வலமாக காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர். கோவிலில் உள்ள பஞ்சகங்கை தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பக்குளத்தில் உள்ள விநாயகர் மற்றும் காமாட்சி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அதை தொடர்ந்து அங்கிருந்து, சங்கரா கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களுடன் இரு மடாதிப திகளும் சங்கர மடத்துக்கு ஊர்வலமாக வந்தனர். சங்கர மடத்தில் உள்ள மஹா சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. தொடர்ந்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட திருஉருவச்சிலைக்கு தங்க கவசம் அணிவிக் கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.