டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, இந்த ஆண்டுக்கான சார்தாம் யாத்திரை நேற்று முதல் தொடங்கியது.
முதல் முறையாக ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு சார்தாமில் உள்ள மூன்று கோவில்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் இமயமலை பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய நான்கு கோவில்களுக்கு ஹிந்துக்கள் புனித யாத்திரை மேற்கொள்வதே சார்தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது. குளிர்காலம் தொடங்கியதும், ஆறு மாத காலத்திற்கு இந்த நான்கு கோவில்களின் நடையும் அடைக்கப்படும். அதன் பின், ஒவ்வொரு ஆண்டும் அக் ஷய திருதியை நாளில் கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டு, சார்தாம் யாத்திரை முறைப்படி தொடங்கப்படும். அந்த வகையில், நேற்று இந்த இரு கோவில்களின் நடை திறக்கப்பட்டதால், இந்த ஆண்டுக்கான சார்தாம் யாத்திரை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. மற்ற இரு கோவில்களில் ருத்ரபிரயாக்கில் உள்ள கேதார்நாத் நடை வரும் 22ம் தேதியும், சமோலியில் உள்ள பத்ரிநாத் கோவில் நடை வரும் 23ம் தேதியும் திறக்கப்படுகிறது. சார்தாம் யாத்திரையில் முதல் முறையாக ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே பிற மதத்தினர் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களில் அனுமதிக்கப்படுவர் என்ற புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. பால், தயிர், நெய், பசுவின் கோமியம் உள்ளிட்ட ஐந்து கலவைகள் மூலம் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யத்தை உட்கொண்ட பின், பிற மதத்தினர் கங்கோத்ரி கோவிலுக்கு செல்லலாம். யமுனோத்ரி கோவிலில் மட்டும் பிற மதத்தினருக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இதற்கிடையே, சார்தாம் யாத்திரைக்கான முதல் பக்தர்கள் குழு ரிஷிகேஷில் இருந்து கடந்த 17ம் தேதி புறப்பட்டது. அவர்கள் பயணித்த பஸ்சை, பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கொடியசைத்து யாத்திரையை தொடங்கி வைத்தார்.
19 லட்சம் பேர் முன்பதிவு! கடந்த முறை சார்தாம் யாத்திரையின் போது மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது. எனினும், இயற்கை சீற்றத்துக்கு இடையே, 51 லட்சம் பக்தர்கள் சார்தாம் யாத்திரை மேற்கொண்டனர். இந்த ஆண்டு சார்தாம் யாத்திரை செல்ல, இதுவரை 19 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.