திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சைத்ரோத்ஸவ திருப்புல்லாணியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பட்டாபிஷேக ராமர் சுவாமி கோயிலில் சைத்ரோத்ஸவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அனுக்கை மற்றும் ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. இன்று காலை 10:30 மணிக்கு பட்டாபிஷேக ராமர் சன்னதி முன்புறமுள்ள கொடி பீடத்திற்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. முன்னதாக ராமபிரான், சீதா பிராட்டியார், லட்சுமணர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட உற்ஸவமூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் ஸ்தானீக பட்டாச்சாரியார்களால் கொடியேற்றப்பட்டது. பின்னர் வஸ்திரம், தர்ப்பைப் புற்களால் சுற்றி கட்டப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் காலை வேளையில் பல்லக்கிலும், இரவில் சிம்மம், அனுமார், கருட சேவை, புன்னை வாகனம், சேஷச, ஹம்ச, குதிரை வாகனம் உள்ளிட்டவைகளுடன் உற்ஸவ மூர்த்திகள் புறப்பாடு நான்கு ரத வீதிகளிலும் நடக்கிறது. மே 1., அன்று காலை 9:00 மணிக்கு பெரிய தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.