சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவ விழா, நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடத்தப்படும் 10 நாள் பிரம்மோத்சவ விழா, நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி, சிறப்பு பூஜைகளுக்குப் பின், கோவில் பிரகாரத்தில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க, பக்தர்களின், ‘கோவிந்தா... கோவிந்தா’ நாமம், விண்ணை பிளக்க, பிரம்மோத்சவ கொடி ஏற்றப்பட்டது. பின், பஞ்ச முத்திரை காட்டப்பட்டு ஆராதனைகள் நடந்தன. 7ல் தேரோட்டம் தொடர்ந்து, பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்கள் மற்றும் வேத பாராயணம் பாடப்பட்டது. பின் பார்த்தசாரதி பெருமாள், தர்மாதி பீடத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு, புன்னை மர வாகனத்தில் சுவாமி வீதியுலா சேவை நடந்தது. நாளை காலை 5:00 மணிக்கு கோபுர தரிசனத்துடன் கருட சேவை உத்சவம் நடக்கிறது. தேரோட்டம் 7ல் நடக்கவுள்ளது. வசந்த உத்சவம் திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், சித்திரை மாத 15 நாட்கள் தியாகராஜ சுவாமி வசந்த உத்சவ பெருவிழா இன்று மாலை தொடங்குகிறது. தொடர்ந்து, பிரமாண்ட மலர் மாலை அலங்காரத்தில், தொட்டியில் எழுந்தருளும் தியாகராஜ சுவாமி, மாடவீதி உத்சவம் காண்பார்.