கூடலூர்: கூடலூர் பாண்டியார் டான்டீ ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கூடலூர் பாண்டியார் அரசு தேயிலை கோட்டம் (டான் டீ ) சரகம் எண் 1-பி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா கடந்த 15ம் தேதி காலை 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 16ம் தேதி மாலை 4:00 மணிக்கு இரும்புபாலம் பாண்டியார் - புன்னம்புழா ஆற்றிலிருந்து புனித நீர் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. மாலை 6:30 மணிக்கு வாஸ்து சாந்தி, விக்னேஸ்வரா பூஜை, கலசத்துக்கு புனித நீர் நிரப்புதல், கலச கும்பம் அலங்காரம், கணபதி பூஜை, முதல் கால பூஜை, நடந்தது. தொடர்ந்து கும்பஸ்தானம், அதிஷ்ட பாலக பூஜை, மகா கணபதி ரக்ஷாபந்தனம், முதல் கால யாகபூஜை, யாக வேள்வி பூஜை, கணபதி ஹோமம், தொடர்ந்து, விமான கோபுரம் கலசம் ஸ்தாபனம், யந்திர ஸ்தாபனம், சுவாமி சிலைகள் பிரசிடை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடந்தது. 9:30 கலச புறப்பாடு தொடர்ந்து, சிவ ஸ்ரீ சர்வ சாதகர் பன்னீர் செல்வம் குருக்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து மகா அபிஷேகம், கோ பூஜை, தச பூஜை, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.