பொன்னேரி: பொன்னேரி அடுத்த திருவேங்கிடபுரத்தில் நேற்று முன்தினம் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது.
பொன்னேரி அடுத்த திருவேங்கிடபுரம் பகுதியில் உள்ள திருவேங்கமடையான் திருக்கல்யாண குழு சார்பில், ஆண்டுதோறும் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான திருக்கல்யாணம், நேற்று முன்தினம் இரவு விமரிசையாக நடந்தது.
மாலை 6:00 மணிக்கு அங்குள்ள பொன்னியம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசை கொண்டு வரும் நிகழ்வுடன் துவங்கிய விழா, ஒய்யாளி, மாலை மாற்றுதல், பூப்பந்து, சங்கல்பம், மாங்கல்ய பூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. ஸ்ரீதேவி, மூதேவி சமேதரராய் சீனிவாச பெருமாள் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் வீற்றிருந்தார். சிறப்பு யாகம் வளர்த்து, சுவாமிகளுக்கு காப்பு கட்டி, பட்டாடை அணிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இரவு 8:30 மணிக்கு பட்டாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க, மங்கள இசை மற்றும் வாண வேடிக்கைகளுடன் ஸ்ரீதேவி, மூதேவியருக்கு திருக்கல்யாணம் நடந்தது. அப்போது, கூடியிருந்த பக்தர்கள், ‘கோவிந்தா... கோவிந்தா’ என கோஷம் எழுப்பி பக்தி பரவசம் அடைந்தனர். தொடர்ந்து, சிறப்பு தீபாராதனையும், திருக்கல்யாண விருந்தும் நடைபெற்றன. பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.