வடமதுரை; திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் பிரம்ம கமலம் பூத்ததையடுத்து அண்ணா நகர் பொதுமக்கள் பூஜை செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
பிரம்ம கமலம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இரவில் மலரக்கூடிய அபூர்வ வகை மலர் பூக்கக்கூடிய தாவரமாகும். கள்ளி இனத்தைச் சேர்ந்த நிஷகாந்தி செடியான இதன் இலை வழியே வெண்ணிறம் கொண்ட மலரானது 3 விதமான இதழ்களை கொண்டு அழகாக இருக்கும். பொதுவாக ஜூலை மாதத்தில் இரவில் மலர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் சுருங்கி, குவிந்துவிடும். தென் அமெரிக்காவின் மெக்சிக்கோ காடுகளை பிறப்பிடமாக கொண்ட இத்தாவரம் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. புத்தருக்கு அஞ்சலி செலுத்த விண்ணுலகினர் மண்ணுலகில் பூவாக வருவதாக இலங்கையில நம்பிக்கை இருப்பதால் சொர்க்கத்தின் பூ என கொண்டாடுகின்றனர். ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்காவில் பெத்லகேமின் நட்சத்திரம் என்றும், இயேசு பிறந்தபோது அவரைக் காண வந்த 3 அரசர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரங்களின் குறியீடாக இந்த பூ பாரக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் அண்ணாநகர் புவனேஸ்வரி வீட்டில் வளரும் பிரம்ம கமலத்தில் நேற்றுமுன்தினம் இரவு 9:00 மணியளவில் பூ மலர்ந்தது. இதையடுத்து அப்பகுதியினர் பூஜை செய்து வழிபட்டனர். இதை பூஜை செய்து வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றியாகும் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.