காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, ஐந்து வீல் சேர்கள் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து கொடுக்கிறது. இருப்பினும், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அழைத்து செல்ல இரண்டு வீல் சேர்கள் மட்டுமே உள்ளது. கூடுதலாக வீல் சேர்கள் வேண்டும் என, பக்தர்கள் வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமாரிடம் தெரிவித்தனர். அதை ஏற்று, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், ஐந்து வீல் சேர்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதை, வயதானோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முறையாக உபயோகப்படுத்தி கொள்ளலாம் என, கோவில் செயல் அலுவலர் கதிரவன் தெரிவித்துள்ளார்.