திருப்பூர் ; ஆடை வடிவமைப்பில் சர்வதேச முத்திரை பதிக்கும் திருப்பூர் ‘நிப்ட்–டீ’ கல்லுாரி மாணவ, மாணவியர், தங்கள் துாரிகை கொண்டு ஆன்மிக அதிசயத்தையும் நிகழ்த்திக் காட்டியுள்ளனர். கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் உள்பிரகார சுவர்களில், அவர்களின் கைவண்ணத்தில் முருகப்பெருமானின் ஒட்டுமொத்த வரலாறும் இப்போது கண்ணைக் கவரும் ஓவியங்களாய்க் காட்சியளிக்கின்றன.
பக்தர் நெஞ்சை உருக்கும்: கல்லுாரியின் ‘பேஷன் டிசைனிங்’ மற்றும் ‘காஸ்ட்யூம் டிசைனிங்’ துறையைச் சேர்ந்த எட்டு மாணவ, மாணவியர் ஒன்றிணைந்து, கடந்த 35 நாட்களாகக் கடும் உழைப்பைச் செலுத்தியுள்ளனர். சுவர்களில் மங்கலக் காவி நிறம் பூசி, அதன் மேல் துாய வெள்ளை நிற பெயின்டால், பார்ப்பவர் நெஞ்சை உருக வைக்கும் வகையில் அறுபடை முருகனின் வரலாற்றைத் தீட்டியுள்ளனர்.
முழு வரலாறும் பேசும்; ஸ்ரீ மகா கணபதியில் தொடங்கி, சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து பறந்த தீப்பொறி தாமரை மலரில் ஆறு குழந்தைகளாய் அவதரிப்பது, கார்த்திகைப் பெண்கள் வளர்ப்பது, அன்னை பார்வதி கட்டி அணைத்து ஆறுமுகனாக மாற்றுவது என ஓவியங்கள் பேசுகின்றன. அசுரனை அழிக்கத் தேவர்கள் வேண்டுவது, அன்னையிடம் வேல் வாங்கிச் சூரசம்ஹாரம் முடித்து வெற்றி வேலோனாக நிற்பது, தெய்வானையை மணப்பது, திருச்செந்துார் சண்முகர் மற்றும் நாரதர் கொடுத்த ஞானப்பழக் கதை எனப் முருகனின் முழு வரலாறும் சுவர்களில் உயிர்பெற்றுள்ளது. இன்று அதிகாலை கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் இந்த அழகிய ஓவியங்கள் பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டன. செயல் அலுவலர் பவானி, அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, அறங்காவலர்கள் ராஜாமணி, துரைசாமி, மகேஸ்வரி, ஜீவானந்தன், திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் ‘நிப்ட்–டீ’ கல்லுாரி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். முருகனின் வரலாற்றைத் தங்களின் துாரிகையால் செதுக்கிய அந்த 8 மாணவ, மாணவியருக்கும், அவர்களுக்குத் துணையிருந்த பேராசிரியர்களுக்கும் விழாவில் பாராட்டும் கவுரவமும் வழங்கப்பட்டது.
கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவிலில், ‘நிப்ட்–டீ’ கல்லுாரி மாணவ, மாணவியர் முருகப்பெருமான் வரலாற்றை சுவரோவியமாகத் தீட்டியுள்ளனர். பிரம்மனை முருகப்பெருமான் சிறைவைத்தல்; சிவன் – பார்வதி அருளைப்பெற்று சூரபத்மனுடன் போரிட புறப்படுதல்; சூரபத்மனுடன் போரிடல்; குழந்தைகளை ஒன்றிணைத்து பார்வதிதேவி ஆறுமுகனை உருவாக்குதல் உள்ளிட்ட ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.