சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடந்த ஆனித் திருமஞ்சன தரிசன விழாவில், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 13ம் தேதி துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடந்து வந்தது. நேற்று முன்தினம் 21ம் தேதி தேரோட்டமும், அதனை தொடர்ந்து, இரவு, ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஏககால லட்சார்ச்சனை நடந்தது.
தரிசன விழாவான இன்று அதிகாலை ஆயிரங்கால் மண்டப முகப்பில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் எழுந்தருள செய்யப்பட்டு, பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் மகாபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து, காலை 6:00 மணி முதல் 10:00 வரையில், ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், அம்பாளுக்கு திருவாபரண அலங்காரம், சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டன. இதனிடையே, சித்சபையில் உற்சவ ஆச்சாரியாரால் ரகஸ்ய பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலாவை தொடர்ந்து, மாலை 3:40 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடன பந்தல் வழியாக நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் முன்னும் பின்னும் நடனமாடியபடி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்த வண்ணம், சித்சபா பிரவேசம் செய்தனர். தரிசன காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
நாளை (23ம் தேதி) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் விழா முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஜெயசூர்யா மற்றும்பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர். கடலுார் எஸ்.பி., விவேகானந்தா சுக்லா, மேற்பார்வையில் டி.எஸ்.பி., கோடீஸ்வரன், சிதம்பரம் டி.எஸ்.பி., பிரதீப் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊர்க்காவல் படையினர் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். சிதம்பரம் நகராட்சி சார்பில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
சிதம்பரம் முழுவதும், மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், பெல்காம் அனந்தம்மாள் அறக்களை, தமிழ்நாடு விஸ்வகர்மா, சோழமண்டல பரம்பரை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதாம் வழங்கப்பட்டது.
போலீசார் – தீட்சிதர்கள் தள்ளுமுள்ளு; தரிசன விழாவையொட்டி, இன்று காலையில் இருந்து, தீட்சிதர்கள் தங்களுடைய கட்டளைக்காரர்களை கோவிலுக்குள் அழைத்து செல்வது வழக்கம். அந்த வகையில், தீட்சிதர்கள் கட்டளைதாரர்களை அழைத்து செல்வதில் இரு தரப்பு தீட்சிதர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அதிக கூட்டம் கோவிலுக்குள் செல்ல காத்திருந்ததால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி., பிரதீப் தலைமையில் போலீசார், ஒட்மொத்தமாக, தீட்சிதர்கள் மற்றும் கட்டளைதாரர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசருக்கும் – தீட்சிதர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு நடந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.