‘உள்ளன்போடு வழிபட்டால் இறைவன் தேடி வந்து அருள்வார்’



 திருப்பூர்: ‘உள்ளன்போடு வழிபடும் அடியார்களுக்கு, இறைவன் தேடி வந்து அருள் செய்கிறார்’ என, சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசினார்.

கொங்குமண்டல ஆடல் வல்லான அறக்கட்டளை, சபரி டைமண்ட்ஸ் அண்ட் ஜூவல்ஸ் சார்பில், திருவாசகம் பயிற்சி வகுப்பு, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில், வாரந்தோறும் செவ்வாய் கிழமை நடைபெற்று வருகிறது.

நேற்றைய வகுப்பில், சைவ சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசியதாவது: தன்னை அன்போடு வழிபடும் அடியார்களுக்கு இறைவன், எளிமையான கோலத்தில், பல ஊர்களில், பல இடங்களில் அருள் செய்த நிகழ்வுகளை, கீர்த்தி திரு அகவல் பகுதி வாயிலாக நாம் அறியமுடிகிறது. உள்ளன்போடு வழிபடும் அடியார்களுக்கு, தேடிவந்து அருள்பவர் இறைவன். ‘எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும், அங்கே வந்து தன் அடியார்க்கு அருள் செய்வான்’ என்கிறது தேவாரம்.

முதல் மூன்று திருமுறைகளைத் தந்த ஞானசம்பந்த பெருமானுக்கு, சுவாமி, திருக்கழுமலம் எனப்படும் சீர்காழியில் காட்சி தந்தார். தோடுடைய செவியன் தோன்றிய இடமே சீர்காழிதான். அந்த கழுமலத்தில் காட்சி கொடுத்தும், கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும் என்று சொல்வார். திருக்கழுக்குன்றம் தலத்திலே தனக்கு காட்சி கொடுத்ததையே ஞாபகப்படுத்துகிறார். மாணிக்கவாசகரின் உள்ளன்பை புரிந்துகொண்ட எம்பெருமான், திருப்பெருந்துறையை போலவே, திருக்கழுக் குன்றத்திலும், மறவாமல் குருநாதராக காட்சி அளித்தார். திருவிளையாடற்புராணத்திலே வரும் வன்னியும், கிணறும், லிங்கமுமாக சாட்சிநாதராகப் பெருமான் எழுந்தருளிய அந்தச் செய்தியை நினைவுகூர்கிறார், மாணிக்கவாசகர். இப்படி பல்வேறு தலங்கள் எல்லாம் அவர் சொல்லும் பொழுது, அந்தத் தலங்களுக்கெல்லாம் நாம் சென்றது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார். 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்