மானாமதுரை; மானாமதுரையில் ஆனந்தவல்லி, சோமநாதர் சுவாமி கோயிலில் புதிதாக உருவாக்கப்பட்ட தேரைப் பாதுகாக்கும் வகையில் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இக்கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.கடந்த 70 வருடங்களுக்கு முன்பு 2 தேர் ஓடிய நிலையில் அவற்றில் ஒரு தேர் சேதமடைந்ததால் ஒரே தேர் மட்டுமே தேரோட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தேர் உருவாக்கும் பணி தொடங்கப்பட்டது. புதிய தேர் தயாரானதை தொடர்ந்து சித்திரை திருவிழாவின் போது பழைய தேர் மற்றும் புதிய தேர் ஒரே நேரத்தில் வீதியுலா வந்தது. புதிய தேரை பாதுகாக்கும் நோக்கில், தேர் நிறுத்தப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி இரும்பு கட்டமைப்புடன் கூடிய பாதுகாப்பு கூரை அமைக்கப்பட்டு, அதன் வெளிப்புறத்தில் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.