திருத்தணி: முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவை ஒட்டி, சரவணப்பொய்கை திருக்குளத்தில் தெப்பம் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.
திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவை ஒட்டி, ஆக., 4ம் தேதி முதல், 8ம் தேதி வரை, ஆடி கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில், 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை மூன்று நாட்கள், மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை என்கிற திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.
தெப்பத்தில், உற்சவர் முருகன் – வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதற்காக, தற்போது சரவணப்பொய்கை திருக்குளத்தில் தெப்பம் கட்டும் பணியில், ஊழியர்கள் துரித வேகத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள், ஆக., 4ம் தேதிக்குள் முடிக்கவும் கோவில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
திருத்தணி முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை விழாவை ஒட்டி, தெப்பம் கட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.