மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பவித்ரோத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது.
மாமல்லபுரத்தில் பிர சித்தி பெற்ற ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், உள்ள இக்கோவில், வைணவ சமய 108 திவ்வியதேச திருத்தலங்களில், 63வதாகவும், நிலம் சார்ந்த பரிகார கோவிலாகவும் விளங்குகிறது.
கோவிலின் தோஷ பரிகாரத்திற்கும், மக்கள் நலன் வேண்டியும், ஆண்டுதோறும் மூன்று நாட்கள், பவித்ரோத்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 25ம் தேதி மாலை, அங்குரார்ப்பணம், ஹோமம் உள்ளிட்டவற்றுடன் உத்சவம் தொடங்கியது.
மறுநாள் காலை, மகாமண்டபத்தில் சுவாமியர் எழுந்தருளி 108 கலச பூஜை நடத்தி திருமஞ்சனமும் நடந்தது.
பின், இரவு சுவாமியருக்கு பவித்ரம் எனப்படும் புனித நுாலை சாற்றி உத்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமியை தரிசித்தனர்.
அதைதொடர்ந்து நேற்று காலை திருமஞ்சன ஹோமம், பூர்ணாஹூதி நடந்து, திவ்விய பிரபந்த சாற்றுமறை சேவையாற்றி உத்சவத்துடன் நிறைவு பெற்றது.