மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா இன்று (10ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி, அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் ஆகஸ்ட் 27ம் தேதி வரை நடைபெறும் விழாவில், விழாவையொட்டி ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 16ம் தேதி கருங்குருவிக்கு உபதேசம் அருளிய நிகழ்ச்சியும், 17ம் தேதி நாரைக்கு மோட்சம் அருளிய நிகழ்ச்சியும், 18ம் தேதி மாணிக்கம் விற்ற திருவிளையாடலும், 19ம் தேதி தருமிக்கு பொற்கிழி வழங்கிய நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 22ம் தேதி இரவு சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி நரியை பரியாக்கிய திருவிளையாடலும், 24ம் தேதி புட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சியும், 25ம் தேதி விறகு விற்ற திருவிளையாடலும் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன.