வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் ஆடி மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு இன்று முதல் ஆக.13 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் முதல் நாளான இன்று பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனையடுத்து காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வெயிலின் தாக்கம் ஓரளவு காணப்பட்ட நிலையில் பக்தர்கள் ஆங்காங்கே இளைப்பாறி, சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னதிகளில் தரிசனம் செய்தனர். மாலை 4:30 மணிக்கு மேல் பிரதோஷ வழிபாட்டு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் மலையில் அன்னதானம், தண்ணீர் பாட்டில்களும், அடிவாரத்தில் பல்வேறு தனியார் மடங்கள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. விருதுநகர், மதுரை மாவட்ட போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் விருதுநகர், மதுரை மாவட்ட நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நசளை ஆக. 11ல் சிவராத்திரி வழிபாடும், ஆக. 12ல் ஆடி அமாவாசை வழிபாடும் நடக்கிறது.