பெரம்பலூர்; அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயிலில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மாமன்னர் ராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடி திருவாதிரை விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி, தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி மாமன்னர் இராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடி திருவாதிரை விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாமன்னர் இராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடி திருவாதிரை விழாவிற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மாமன்னர் இராஜேந்திரசோழன் அவர்களின் பிறந்த நாள் விழா அவர் வாழ்ந்த, அவர் நிர்மாணித்த இப்பகுதியில் நடத்தும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மாமன்னர் இராஜேந்திரசோழன் அவர்கள் போர், அரசியல், நீர் மேலாண்மை உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கியுள்ளார். கங்கை வரை சென்று சோழர்களின் பெருமையையும், தமிழர்களின் பெருமையையும் நிலைநாட்டியுள்ளார். போர்களில் வெற்றிப்பெற்று இப்பகுதியினை தேர்வு செய்து கங்கைகொண்டசோழபுரம் என்ற நகரத்தினை நிர்மாணித்து உருவாக்கியுள்ளார்கள். ஏறத்தாழ 13 ஆண்டுகளில் கங்கைகொண்டசோழபுரம் திருக்கோயிலை எழுப்பியுள்ளார். இது இறைவனின் மீது அவர் வைத்திருந்த பக்தி, சமயத்தினை வளர்ப்பதற்கான பண்பாடு, கலை மீதான ஆர்வத்தினை எடுத்துரைப்பதாக விளங்குகிறது. சுமார் 250 ஆண்டுகள் கங்கைகொண்டசோழபுரம் சோழப் பேரரசின் தலைநகராக இருந்துள்ளது என்றால் நாம் இப்பகுதியில் பிறந்ததற்கும், வாழ்வதற்கும் பெருமைப்பட வேண்டும்.
இத்தகைய தகவல்களை இளம் தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்க வேண்டும். அந்தவகையில் மாமன்னர் இராஜேந்திரசோழனின் பெருமைகளை இளம் தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையிலும், அவருக்கு சிறப்பு செய்யும் வகையிலும் இன்றையதினம் இவ்விழாவானது நடைபெறுகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மாமன்னர் இராஜேந்திரசோழன் அவர்களது கீர்த்தி, புகழ், அரசியல் நுட்பம், கடல்கடந்து சென்று போரில் வெற்றிப்பெற்ற அவரது போர்த்திறன், கடல் அலைகள் குறித்த அறிவுநுட்பம், எந்த போரிலும் தோல்வியே அடையாத அவரின் வீரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதன் அடிப்படையில் நடைபெறுகிறது.
மேலும், சோழர்களின் வாழ்ந்துக் கொண்டிருக்ககூடிய சிற்பக்கலையாக கங்கைகொண்டசோழபுரம் திகழ்கிறது. கங்கை வரை சென்று போரில் வென்றுள்ளார் என்பதற்கு இக்கோவிலில் உள்ள சிற்பங்களே சாட்சியாக திகழ்கிறது. 1987 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற செப்பேடு மாமன்னர் இராஜேந்திரசோழன் குறித்த தகவல்களை உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது. இச்செப்பேடு அரசு முத்திரையுடன் அமைந்துள்ளதுடன் அவை மாமன்னர் இராஜேந்திரசோழன் குறித்த தகவல்களையும், அவரது தலைமுறைகள், கொடைகள் குறித்த தகவல்களையும் கொண்டுள்ளது. கங்கைகொண்டசோழபுரம் பகுதியானது அரிய பொக்கிஷமாகும். மேலும், அரியலூர் மாவட்டத்தில் அரிய வகை படிமங்களும் காணப்படுகின்றன.
மாமன்னர் இராஜேந்திரசோழனின் புகழை என்றைக்கும் நிலைநிறுத்துவதாக நமது செயல்பாடுகள் அமையவேண்டும். வேளாண்மை, நீர் மேலாண்மை, அரசியல் நுட்பம், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அவரை பின்பற்றி நடப்பதற்கான வாய்ப்புகள் நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது அதனை நாம் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இப்பகுதி குறித்த நல்ல தகவல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும். சுற்றுலா பகுதியாக கங்கைகொண்டசோழபுரம் மென்மேலும் வளர்ச்சிப் பெறவேண்டும் . இவ்வாறு அவர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, கங்கைகொண்டசோழபுரத்தில் காவல்துறையின் சார்பில் சாலை விதிமுறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்கம் திருவையாறு, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவ, மாணவிகளின் மங்கல இசை மற்றும் வீணை இசை நிகழ்ச்சி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்.சங்கமித்திரை, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் தேன்ராஜ், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் மனோகரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் வரதராஜன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.