சென்னை: ‘‘மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து 285 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்,’’ என, போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ஒட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் குறித்து, சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில், அமைச்சர் பார்த்திபன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின், அவர் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து, சென்னைக்கு வரும் பயணியரின் வசதிக்காக, போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து இயக்கம், பயணியர் வருகை, கூட்ட நெரிசல், மாநகர இணைப்பு பேருந்து சேவைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து, அலுவலர்களிடம் கேட்டறிந்தேன். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடப்பதை முன்னிட்டு, பயணியரின் வசதிக்காக சென்னையில் இருந்து, 285 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளோம். இதுதவிர, மற்ற அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பிலும், போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை நாட்களில், பயணியர் சிரமமின்றி பாதுகாப்பாக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது போக்குவரத்து துறை செயலர் நிர்மல் ராஜ், மாநகர் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஜெயசீலன், அரசு விரைவுப் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.