கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் சகாஸ்ரா நாட்டியஞ்சலி சார்பில் நேற்று மாலை 1008 மாணவிகளின், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் துவக்கி வைத்து, மாணவிகள் நாட்டியத்தை கண்டு களித்தார்.
முன்னதாக நடராஜர் கோவிலுக்கு வருகை தந்த கவர்னர் மற்றும் அவரது மனைவிக்கு, பொதுதீட்சிதர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து இருவரும் கனகசபை மீது ஏறி சிவகாமசுந்தரி அம்பாள் சமேச நடராஜரை தரிசனம் செய்தனர்.
கோவில் பொதுதீட்சிதர்கள், கவர்னருக்கு பொன்னாடை அணிவித்து பிரசாதம் வழங்கினர். பின்னர் பிரதமர் நரேந்திரமோடி76வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில் வளாகத்தில் மகா தீப ஒளி நிகழ்ச்சியை கவர்னர் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வினோத் ராகேவேந்திரன், குருவாயூரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக மாலை 4:00 மணிக்கு சிதம்பரம் கவர்னர் வந்தார். அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எஸ்.பி., விவேகானந்த சுக்லா, பல்கலைக் கழக பதிவாளர் சிங்காரவேலு ஆகியோர் பூங்கொத்து கொடுத்த வரவேற்றனர். பின்னர் நடராஜர் கோவில் சாமி தரிசனம் முடித்துவிட்டு, மாலை 6:00 மணிக்கு சிதம்பரத்தில் இருந்து கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.