ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் அறங்காவலர் பதவிக்கு 150-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், விண்ணப்பங்களில் தவறுகள், இணைக்கப்படாத சான்றிதழ்கள், கூடுதல் விண்ணப்பங்கள் போன்ற காரணங்களால் 50 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், வைத்தியநாதர், ராஜபாளையம் மாயூரநாதர், திருத்தங்கல் நின்றாராயண பெருமாள், சிவகாசி விஸ்வநாதர் கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
ஆண்டாள் கோயிலில் ஒரு பெண் உட்பட 5 பேர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களை சேர்ந்த 150 க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களின் விண்ணப்பங்களை ஆய்வாளர் ஆய்வு செய்ததில், சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை தாக்கல் செய்ததும், இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்களை இணைக்காமல் இருந்ததும், ஒரு சிலர் சம்பளப் பணி என கருதி விண்ணப்பித்ததும் தெரிய வந்தது. இதனால் 50 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சி காலங்களில் அரசியல் பின்புலம் உள்ளவர்கள், தொழில் அதிபர்கள் மட்டுமே அறங்காவலர்களாக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது விண்ணப்பித்தவர்கள் யாரும் செல்வாக்கோ, பிரபலமோ இல்லாதவர்கள். த.வெ.க. ஆதரவாளர்கள் ஒரு சிலரும் விண்ணப்பித்துள்ளனர்.ஆய்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அடுத்த கட்ட நடவடிக்கைக்காக மதுரை இணைய ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.