சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில், நவராத்திரி விழாவின் போது, ஆண்டுதோறும் பிரமாண்டமான கொலு வைக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு நவராத்திரி விழாவையொட்டி, நடராஜர் கோவிலில் வழக்கம் போல் பெரிய அளவிலான கொலு அமைக்கப்பட்டுள்ளது. 21 அடி அகலம், 21 அடி நீளம், 21 அடி உயரத்தில், 21 படிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்கொலுவில், 3,500 க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த கொலு கண்காட்சி வழிபாடு இன்று தொடங்கியது. நவராத்திரியையொட்டி, இந்த கொலு தொடங்கப்பட்டு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து வரும் 20ம் தேதி வரை, நாள்தோறும் இரவு நடராஜர் கோவிலில், சிவகாமசுந்தரி அம்மனுக்கு அபிஷேகமும், மலர் அலங்காரமும் செய்து, ஆராதனைகள் நடக்கிறது. ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.
இந்நிகழ்வோடு, பக்தர்கள் பெரிய அளவிலான இந்தக் கொலுவை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டை கோவில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர். இந்த பிரமாண்ட கொலுவிற்காக, பக்தர்களும் கொலு பொம்மைகளை வழங்கியுள்ளனர்.