தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை, தி.நகரில் உள்ள சிருங்கேரி சாரதா பீடம் ஸ்ரீ பாரதி வித்யாஸ்ரமத்தில், 1995ம் ஆண்டு முதல் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு விழாவை, ஜகத்குரு பாரதீ தீர்த்த மகாசுவாமிகள், ஜகத்குரு விதுசேகர பாரதி சுவாமிகள், நேற்று தொடங்கி வைத்தனர்.
வரும் 22ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ள விழாவில், தினமும் காலை 7:30 மணிக்கு சங்கல்பம், வேத பாராயணம், சப்தசதி பாராயணம் நடக்கிறது; வரும் 19ம் தேதி வரை காலை் லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. காலை 11:00 மணிக்கு சுவாசினி, கன்யா பூஜைகள், 11:30 மணிக்கு மகா தீபாராதனை, பகல் 12:00 மணிக்கு பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவற்றுடன் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் சாரதாம்பாள், வெங்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்; இரவு திருவீதி உலாவும் நடக்கிறது.
விஜயதசமியான 21ம் தேதி காலை 7:00 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் குழந்தைகளுக்கு கல்வியைத் தொடங்கி வைக்கும் ‛அட்சரப்யாசம்‛ நடைபெறுகிறது. மேலும், 150க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, நவராத்திரி விழா குறித்தும், நமது கலாசாரம் குறித்தும் விளக்குவதுடன், அவர்களுக்கு நவராத்திரி பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது.