கொல்கத்தா: துர்கா பூஜையை முன்னிட்டு கொல்கத்தா மேம்பாலங்கள் வண்ணமயமாகவும் பாரம்பரிய அல்போனா கலைநயத்துடனும் ஜொலிக்கின்றன.
நவராத்திரி விழா வட மாநிலங்களில் துர்கா பூஜையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு துர்கா பூஜையைக் கொண்டாடும் விதமாக, கொல்கத்தாவின் முக்கிய அடையாளங்களாகத் திகழும் மேம்பாலங்கள் வண்ணங்கள் மற்றும் பாரம்பரிய வங்காள அல்போனா ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தின் மிகப்பெரிய வருடாந்திரத் திருவிழாவான துர்கா பூஜையை முன்னிட்டு, மேற்கு வங்க அரசு இந்த வண்ணமயமான அலங்காரப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதில் பண்டிகைக் காலத்திற்கு ஏற்ற பிரகாசமான வண்ணங்களும், நுணுக்கமான வங்காள அல்போனா வடிவமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. அல்போனா என்பது பண்டிகைகளின் போது அரிசி மாவைக் கொண்டு வரையப்படும் ஒரு பாரம்பரிய நாட்டுப்புறக் கலை வடிவமாகும்.
கரியாஹாட் மற்றும் சிங்ரிஹாட்டா மேம்பாலங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகளில் நடைபெற்று வரும் ஓவியப் பணிகள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்தக் கொண்டாட்டத்திற்கான இந்த அலங்கார மாற்றம் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிங்ரிஹாட்டா மேம்பாலத்தின் மேல்புறம் வானவில்லை போன்ற அழகாக ஜொலிக்கிறது. துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு முன்னதாக இன்னும் பல பிரபலமான பாலங்கள் மற்றும் மேம்பாலங்களும் இதேபோன்ற அலங்காரம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் அக்னிமித்ரா பால் கூறியதாவது; இந்த அலங்கார மாற்றம் அன்பு மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடு. ரெட் ரோடு மற்றும் கங்கா படித்துறைகள் உள்ளிட்ட நகரம் முழுவதும் அழகுபடுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உங்களுக்காகவே," என்று கூறிய அமைச்சர் நலமுடன் இருங்கள்; அனைவருக்கும் இனிய துர்கா பூஜை வாழ்த்துகள்," என்றும் தெரிவித்தார். துர்கா பூஜை நெருங்கி வரும் வேளையில், வண்ணமயமான மேம்பாலங்களும் பாரம்பரியக் கலை வடிவங்களும் கொல்கத்தாவின் கொண்டாட்டத்திற்கு புதியதொரு மெருகூட்டுகின்றன.