ஐப்பசி துலாஸ்நானம்; திருச்சி காவிரியில் பக்தர்கள் புனித நீராடல்



பகிர்க copied

திருச்சி: திருச்சி அருகே, திருப்பராய்த்துறை காவிரி ஆற்றில், ஐப்பசி மாத பிறப்பையொட்டி நடந்த துலாஸ்நானத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.


ஐப்பசி முதல் தேதி காவிரி ஆற்றில் நீராடுவது துலாஸ்நானம். துலா மாதமான ஐப்பசியில் உலகிலுள்ள, அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும், பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவேரி நதியில் சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறுவதுடன், முக்தியும் கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.


அகண்ட காவிரியில் ஐப்பசி மாதம், முதல் நாளில் நடக்கும் முழுக்கு, முதல் முழுக்கு என்றும், மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் கடைசி நாளில் கடைமுழுக்கு நிகழ்வும் நடைபெறும். திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள திருப்பராய்த்துறை காவிரி கரையில் உள்ள தாருகாவனேஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முதல்நாள் துலாஸ்நானம் விழா நடக்கும். அதன்படி, நேற்று காலை கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தன. அதன்பின், வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர் அம்பாள், பசும்பொன் மயிலாம்பிகை சாமிகள், திருக்கைலாய வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் வீதிஉலா வந்து அகண்ட காவிரியை வந்தடைந்தனர். அங்கு, கோவில் யாகபூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர், காவிரி ஆற்றில் ஊற்றப்பட்டது. தொடர்ந்து, அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்து, துலாஸ்நானம் எனும் தீர்த்தவாரி வைபவம் நடந்தது. இதையடுத்து, ஐப்பசி மாத பிறப்பையொட்டி, காவிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, சுவாமி, அம்பாளை வழிபட்டனர். ஐப்பசி முதல் தேதி துலாஸ்நான தீர்த்தாவரியில், காவிரியில் புனித நீராடினால், பாவங்கள் தீரும், குடும்பத்துக்கு நன்மைகள் வந்து சேரும் என்பது ஐதீகம்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்