தென்காசி: தென்காசியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த திருத்தலமான காசி விஸ்வநாதர் அருள்மிகு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற பழமையான திருத்தலங்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மகப் பெருந்திருவிழா மற்றும் ஐப்பசி மாத திருக்கல்யாணத் திருவிழா ஆகியவை பத்து நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஐப்பசி மாத திருக்கல்யாணத் திருவிழா தொடக்கமாக, உலகம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்திற்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மஞ்சள் பொடி, மாவுப் பொடி, சந்தனம், இளநீர், பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான மூலிகை மற்றும் அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனையும் சுவாமியையும் வழிபட்டனர்.
திருவிழாவின் ஒன்பதாம் நாளான வரும் நவம்பர் 3ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, நவம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மேல், தீர்த்தவாரி மண்டபத்தில் அம்மன் தவசு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மாலை அருள்மிகு உலகம்மன், காசி விஸ்வநாதரிடம் தவசுக் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, உத்திர நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபவேளையில், இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கட்டளைதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர். ஐப்பசி மாத திருக்கல்யாணத் திருவிழா தொடங்கியுள்ளதால், தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருக்கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.