கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் புத்தூர்வயல அருகே, பழங்குடி மக்களின் பாரம்பரியமான பூ புத்தரி எனப்படும் நெற்கதிர் அறுவடை திருவிழா, பழங்குடியினரின் பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் பழங்குடி மக்கள் சார்பில் நெற்பயிர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நலமுடன் இருக்கவும், வனவிலங்குகளால், நெற் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, ஆண்டு தோறும் நெல் அறுவடைக்கு முன்பாக பாரம்பரியமான பூ புத்தரி எனப்படும் கதிர் அறுவடை திருவிழாவை ஐப்பசி மாதம் 10ம் நாள் கொண்டாடி வருகின்றனர். நடப்பு ஆண்டு, திருவிழா இன்று நடந்தது. இதற்காக, விழா நம்பாலாகோட்டை வேட்டைக்கொரு மகன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பழங்குடியினர், அங்கிருந்து புத்தூர்வயல் வந்தனர். அங்குள்ள வயலில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பாரம்பரிய இசையுடன் விளக்கேற்றி பூஜையுடன், பூ புத்தரி திருவிழா நடந்தது. இதற்காக 10 நாட்கள் விரதம் இருந்த பழங்குடியின ஆண்கள் நெற்கதிர் அறுவடை செய்து, அதனை கட்டுகளாக கட்டி ஊர்வலமாக வட்டப்பாறை பகவதி அம்மன் கோவிலுக்கு எடுத்து சென்றனர். அங்கு நெற்கதிர்களுக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து, பழங்குடியின பெண்கள் பாரம்பரிய நடனமாடி அசத்தினர்.
பூஜை செய்யப்பட்ட நெற்கதிர்கள் மங்குழி பகவதி அம்மன் கோயில், புத்தூர்வயல் விஷ்ணு கோவில், தேவாலா வேட்டைக்கொருமகன், நம்பாலாக்கோட்டை வேட்டைக்கொருமகன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.கோவில்களில் நெற்கதிருக்கு சிறப்பு பூஜை செய்து விவசாயிகளுக்கு பிரசாதமாக வழங்கினர். விழாவில், பழங்குடியினர் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.