மதுரை:குருவின் அருள் இருந்தால் தான், ஒருவருக்கு மணவாழ்வு, குழந்தைப்பேறு உண்டாகும். இவற்றில் தடை உள்ளவர்கள் வியாழக்கிழமை விரதம் மேற்கொள்வது நன்மை அளிக்கும். வியாழக்கிழமை குரு வாரமாக கருதப்படுகிறது. ஜோதிடத்திலும் ஆன்மிகத்திலும் குரு என்ற சொல் அறியாமையை நீக்கி ஒளியைத் தருபவரைக் குறிக்கும். ஞானம், கல்வி, நல்வழிப்படுத்துதல் ஆகியவற்றிற்கு அதிபதியாக குரு விளங்குவதால், ஆன்மிக குருமார்கள், சித்தர்கள் மற்றும் மகான்களை இந்த நாளில் வழிபடுவது மிகச் சிறந்த பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.
வியாழக்கிழமை மகான்களை வணங்குவதன் மூலம் மனக்குழப்பங்கள் நீங்கி, தெளிவான அறிவும், ஞானமும், கல்வியில் சிறந்த விளங்கும் ஆற்றலும் கிடைக்கும். குரு தட்சிணாமூர்த்தி, காஞ்சி மகா பெரியவர், சீரடி சாயி பாபா, ராகவேந்திர சுவாமிகள், சத்யசாய்பாபா, மற்றும் பல்வேறு மகான்கன், சித்தர்கள் தங்களின் சீடர்களுக்கு உபதேசம் செய்யவும், பக்தர்களின் குறைகளைத் தீர்க்கவும் வியாழக்கிழமையை விசேஷ நாளாகக் கொண்டிருந்தனர். இந்த நாளில் மகான்களின் ஜீவ சமாதிகளுக்கு செல்வதோ அல்லது அவர்களின் படத்திற்கு விளக்கேற்றி வழிபடுவதோ மனதிற்கு மிகுந்த அமைதியையும் நேர்மறை ஆற்றலையும் தரும்.