திருச்சி: தமிழகத்தில் ஆதிசங்கரரின் தத்துவக் கருத்துகளும், பிரம்மசூத்திர பாஷ்யமும் பரவலாகப் போற்றப்பட்டதற்குச் சான்றாக, திருச்சி மாவட்டம் சோழமாதேவி கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் சோழர் காலக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.
வீரராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில், கிரந்தம் மற்றும் தமிழ் எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில், ஆதிசங்கரரின் (பகவத்பாதர்) சாரீரக பாஷ்யம் என்ற நூலுக்கு பிரதீபகம் என்ற உரையை எழுதிய சிதானந்த பிடாரர் பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது. அந்த உரையைக் கற்பிக்கும் ஆசிரியரின் பராமரிப்புக்காக நிலம் வழங்கப்பட்ட செய்தியும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நில மானியத்தைப் பாதுகாக்குமாறு வீரராஜேந்திர சோழனே கிராம நிர்வாக சபையிடம் கேட்டுக்கொண்டதாகவும் கல்வெட்டு தெரிவிக்கிறது. இதன் மூலம் மன்னர், தமது நாட்டில் தத்துவக் கல்வி மற்றும் ஆன்மிக அறிவு வளர்ச்சிக்கு அளித்த முக்கியத்துவம் தெரியவருகிறது. குறிப்பாக, ஆதிசங்கரரின் பிரம்மசூத்திர பாஷ்யத்திற்கு சோழ நாட்டைச் சேர்ந்த சிதானந்த பிடாரர் உரை எழுதியதும், அந்த உரை சமயப் பற்றுடன் கற்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆதிசங்கரரும் அவரது தத்துவ நூல்களும் சோழர் காலத்திலேயே தமிழகத்தில் செல்வாக்குடன் விளங்கியதை இந்தக் கல்வெட்டுச் சான்று எடுத்துரைக்கிறது.