ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா வரும் டிசம்பர் 9ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபத்தையொட்டிய மணல்வெளியில் நடைபெற்றது. விழாவில் கோவில் நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். டிசம்பர் 9ம் தேதி இரவு 7 மணிக்கு திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது, டிசம்பர் 10ம் தேதி பகல்பத்து விழா துவங்குகிறது. பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 20ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு நடைபெற உள்ளது.