சபரிமலை கோயிலில் நடைபெறும் பூஜை முறைகள்!



1. உஷத் கால பூஜை: அதிகாலையில் ஐயப்பன் சன்னிதி நடைதிறந்த உடன் அபிஷேகம் நடைபெறும். இதனை கேரள தந்திரி மட்டுமே நடத்துவார். காலையில் கணபதி ஹோமத்துடன் உஷ பூஜை நடைபெறும். அப்போது நைவேத்தியமாக இடித்துப் பிழிந்த கேரள பாயசம் படைக்கப்படும். அதன்பின் நடை சாத்தப்படும். கணபதி மற்றும் நாகராஜா சன்னிதி பூஜைகள் முடிந்ததும் பிரசன்ன பூஜை நடைபெறும். பின்னர் மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். உஷ பூஜைக்குப் பின்னர் நெய் அபிஷேகம் பகல் 12 மணியிலிருந்து 1 மணி வரை நடைபெறும். இதன் பின்னர் கோயில் சுத்தம் செய்யப்படும்.

2. உச்சி கால பூஜை: இதனை முழுக்க தந்திரி செய்வார். இச்சமயம் ஐயப்பனின் முழு சாந்நித்யமும் சன்னிதியில் பரவிக் கிடக்கும். இதன்பின் 1.30 மணி அளவில் நடை சார்த்தப்படும். மீண்டும் மாலை 4 மணி அல்லது 5 மணி அளவில் நடைதிறக்கப்பட்டு தீபாராதனையும், புஷ்ப அபிஷேகமும் நடைபெறும். புஷ்ப குவியலில் சிறு குழந்தையாக சுவாமியின் முகம் மட்டும் தெரியும். நீளமாக ஐயப்பன் முன்பு பூக்குவியல் சமர்ப்பிக்கப்படும். இதனைக் காணக் கண் கோடி வேண்டும். காலையில் பல மணி நேரம் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெறுவதால் ஐயப்ப விக்கிரகத்தில் ஏற்படும் உஷ்ணத்தை சரி செய்ய புஷ்ப அலங்கார பூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் முன்கூட்டியே புஷ்ப அலங்காரம் செய்ய பணம் செலுத்தி பங்கு கொள்ளலாம்.

3. அத்தாழ பூஜை: இதன் பின்னர் இரவு சுமார் 10 மணி அளவில் அத்தாழ பூஜை எனப்படும் இரவு நேர சயன பூஜை நடைபெறும். ஐயப்பன் நெய் அபிஷேகத்தில் சர்வ காலமும் இருப்பதால் உஷ்ணத்துடன் திருமேனி விளங்கும். எனவே, உண்ணியப்பம் மற்றும் பானகம் நிவேதனம் செய்யப்படுகிறது. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு பானகம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஹரிவராசனம் (தாலாட்டுப் பாட்டு) பாடி திருச் சன்னிதியின் நடை சார்த்தப்படுகிறது.

இவை தவிர, மாத பூஜை நடைபெறும் நாட்களில் தினமும் இரவில் படி பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜை நடைபெறுகிறது. இப்பூஜையின் போது அடிக்கடி நடைசார்த்தப்பட வேண்டியிருப்பதாலும், மகர விளக்கு போன்ற சமயங்களில் அதிக அளவில் பக்தர்கள் தரிசிக்க காத்திருப்பதாலும், தேவசம் போர்டு, படி பூஜையை விசேஷ தினங்களில் அனுமதிப்பதில்லை.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்