சாய்பாபா -பகுதி 12 | Sri Sathya Sai Baba's 100 Birthday Celebration | Sathya Sai Baba News | Sri Sathya Sai Baba | Sri Sathya Sai Baba photos | ஸ்ரீ சத்ய சாய் பாபா - 100வது பிறந்த நாள்

சாய்பாபா -பகுதி 12



சத்யா நடந்தே கமலாப்பூர் வந்து சேர்ந்து விட்டான்.எந்த வகையிலும் அவன் தன் பெற்றோரை சிரமப்படுத்த நினைத்ததில்லை. இந்தக்கால மாணவர்கள் சத்யசாய்பாபாவிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அவரது அண்ணன் சேஷமராஜூ பெண் எடுத்த ஊர் தான் கமலாப்பூர். தன் மாமனார் வீட்டில், சத்யாவை தங்கச் செய்து உயர்நிலைக் கல்விக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்டு சாய்பாபா அந்த வீட்டாரிடம் பணஉதவி எதுவும் கேட்டதில்லை. அதுபோல் தன் நண்பர்களிடமும் பணம் கேட்டதில்லை. அவரது வாழ்நாளில் சிறு பையனாக இருந்தபோதே உழைக்கத் துவங்கி விட்டார்.சில திறமைகள் மனிதர்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ளன. குறிப்பாக இளமைப்பருவத்தில், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதை செயல்படுத்துவதில் தயக்கம் காட்டுவதால் தான் நமது மாணவர்கள் முன்னேறுவதில்லை. அமெரிக்காவில் மாணவர்கள் கார் துடைத்து சம்பாதிக்கிறார்கள், ஜப்பானில் ஓய்வு நேரத்தில் வேலைக்கு போகிறார்கள், என்று புத்தகங்களில் படிக்கிறார்களே தவிர, நாமும் அப்படி செய்தால் என்ன என்று பெரும்பாலோனோர் விரும்புவதில்லை. பெற்றோர்களும் அதை கவுரவக்குறைவாக கருதுகிறார்கள்.சத்யா அப்படியில்லை...அவர் இளமையிலேயே தன் திறமையால் சிறுசிறு வேலைகளைச் செய்தார். அதில் கிடைத்த பணத்தில் படித்தார். அண்ணன் சேஷமராஜூ திடீரென அனந்தப்பூருக்கு படிக்க சென்று விட்டார். தெலுங்கில் வித்வான் பட்டம் பெறுவது அவரது நோக்கம். எனவே படிப்பு நீங்கலான மற்ற செலவுகளுக்கு சத்யாவுக்கு பணம் கிடைப்பதில்லை. சத்யாவும் அனாவசியமாக செலவழிப்பதை விரும்பவில்லை. சிறுவயதில் மனஅடக்கம் இருப்பது கடினம். குழந்தைகளுக்கு எதைப்பார்த்தாலும் வாங்க வேண்டுமென்ற எண்ணமே இருக்கும். ஆனால் சத்யா அப்படி எதையும் விரும்பவில்லை. மனக்கட்டுப்பாடு மனிதனை வாழ்க்கையில் உயர்த்துகிறது. இதை சிறு வயதிலேயே நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை, மானிடராகப் பிறந்த சாய்பாபா, தன் வாழ்க்கையின் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.இதரவகை செலவுகளை, சத்யாவே சம்பாதிக்க துவங்கி விட்டான். ஒருமுறை அவன், காகிதத்தில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். அதை பின்பக்கமாக வந்த நண்பன் ஒருவன் படித்து விட்டு சிரித்தான்.

சத்யா! நீ பாட்டெல்லாம் கூட எழுதுவியா?சத்யா அவன் வந்ததை அப்போது தான் அறிந்தவனாய், உம்! அப்பப்ப பாட்டு எழுதுவேன். இது குடைப்பாட்டு. இங்குள்ள வியாபாரி கோட்டை சுப்பண்ணா ஒரு டெக்னிக் வைத்திருக்கிறார். அதாவது தன் கடைமுன்பு குழந்தைகளை நிறுத்தி, தன் கடையிலுள்ள பொம்மை, குடை, பேன்சி பொருட்களைப் பற்றி பாட வைக்கிறார். அவர்கள் பாட நல்ல பாட்டாக நான் எழுதி கொடுக்கிறேன். இவை விளம்பரப் பாடல்கள். இதை எழுதினால், அவர் எனக்கு பணமோ, பொருளோ தருவார். இதை வைத்து நான் பிற செலவுகளை கவனித்துக் கொள்கிறேன், என்றான்.மகான்கள் சிறுவயது முதலே மானிடர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுகிறார்கள். நமது மாணவர்களும் தங்களால் முடிந்த வேலையை செய்து, தங்கள் ஓராண்டு படிப்புச் செலவை தாங்களே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இந்தக்காலத்தில் எவ்வளவோ சிறு வேலைகள் காத்துக் கிடக்கின்றன. மாணவர்கள் சத்யசாயியைப் போல வாழ்வில் முன்னேற உறுதி எடுக்க வேண்டும். இதற்கு சாயியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.சத்யா சிறுவயதில் பஜனைப் பாடல்கள் மட்டுமல்ல....தன்னை அன்போடு ஊட்டி வளர்த்த சுப்பம்மாவின் கணவர் பற்றியும் கூட ஒரு பாட்டு எழுதினான். அவர் கிராமகர்ணம் என்பதால் தோரணைக்காக பெரிய மீசை வைத்திருந்தார். அதைக் கேலி செய்து சத்யா ஒரு பாட்டுப் பாடினான். அதோடு அவர் மீசையை எடுத்து விட்டார். இப்படி சத்யா எழுதிய குறும்புப்பாடல்களும் அதிகம்.குழந்தைகள் குறும்புத்தனமாக பேசுவார்கள். ஏதாவது படம் வரைந்து கிறுக்கித் தள்ளுவார்கள். இதை நாம் தடுக்கக்கூடாது. காரணம், அவர்கள் தங்களை மேதைகள் போல மனதில் கருதி செய்பவை இவை. அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் இந்த கிறுக்கல் படைப்புகள் மிக உயர்ந்தது. இதை தடுக்காமல் இருந்தால் பத்தில் ஒருவர் சிறந்த படைப்பாளிகளாக வருவர் என்பது உறுதி. சத்யா சிறுவயதில் குறும்பாக எழுதிய பாடல்கள், காலப்போக்கில் அவனது கற்பனைத் திறனை விளம்பரப் பாடல்கள் எழுதும் அளவு உயர்த்தி விட்டது. அது சிறு வருமானத்தையும் தந்தது.

அன்று மாலையில் சத்யாவின் குடைப்பாட்டு ஊரில் பிரபலமானது.எடுத்து விரித்து பிரிக்கலாம், மடக்கி கையில் சுருட்டலாம், என எதுகை மோனையுடன் எழுதி இருந்ததைக் கேட்டு, மக்கள் அந்தப்பாட்டில் மனம் லயித்தனர். கோட்டை சுப்பண்ணாவுக்கு வியாபாரமும் நன்றாக இருந்தது.நாட்கள் வேகமாக நகர்ந்தன. யாருமே எதிர்பாராத பொழுதாக அன்று கமலாப்பூருக்கு விடிந்தது. தெய்வம் சில நாட்கள் புட்டபர்த்தி கிராமத்தில் இருந்தது. சில காலம் கமலாப்பூர் என்ற சிறு நகரத்தில் இருந்தது. இப்போது அண்ணன் சேஷமராஜூவுக்கு வித்வான் படிப்பு முடிந்து, உரவகொண்டா என்ற ஊரில் வேலை கிடைத்தது. அதுவும் ஆசிரியர் பணி. தான் பணியாற்றும் பள்ளியிலேயே தம்பியையும் சேர்த்துவிட அவர் முடிவு செய்து விட்டார்.சத்யாவுக்கு வேதனை. புட்டபர்த்தியிலுள்ள நண்பர்களைப் பிரிந்தாயிற்று. இன்று கமலாப்பூர் நண்பர்களையும் விட்டு பிரிய வேண்டிய சூழல் உருவாகி விட்டது. விளையாட்டு ஆசிரியர் இந்தத் தகவலைக் கேட்டு அழுதே விட்டார். ஊர் முக்கிய பிரமுகரின் மகன்கள் இருவரும், சத்யாவைக் கட்டிப்பிடித்து அழுதனர்.சத்யா...எங்க அப்பா இந்த ஊர் சிரஸ்தார். எங்ககிட்ட நெறய பணம் இருக்கு. ஆனா உன்னைப் போல நல்ல நண்பன் இல்லை. நீ இங்கேயே படி, எங்களை விட்டு போய் விடாதே, எனக்கதறினர்.சத்யா அமைதியாக அவர்களைத் தேற்றி, உங்கள் பணத்தில் படிப்பதை என் அண்ணனோ, நானோ விரும்பமாட்டோம். இங்கேயே தனியாகத் தங்கிப் படிப்பதை அம்மாவும் விரும்பமாட்டாள். தங்கிப்படிக்கும் அளவுக்கு எனக்கு வசதியும் இல்லை, என்றான். அவன் வாய் அப்படி சொன்னதே ஒழிய, அந்த நண்பர்களைப் பிரிய சத்யாவுக்கும் விருப்பமில்லை. ஆனாலும், பொங்கி வந்த கண்ணீரை இமைகளிலிருந்து கீழே விழாமல் அடக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டான்.உரவுகொண்டா நகரம் சத்யாவுடன் உறவு கொள்ள தயாராக இருந்தது. ஆனால் அவன் படிக்கப் போகும் பள்ளியிலோ, ஆசிரியர்களுக்குள் ஒரு பெரிய தகராறே நடந்து கொண்டிருந்தது.தலைமை ஆசிரியரின் அறையில், சார்..அந்த சத்யாங்கிற பையன் நம்ம ஸ்கூலுக்கு வந்தா...என ஆரம்பித்தார் ஒரு ஆசிரியர். அதைக் கேட்டு மற்ற ஆசிரியர்கள் கொதித்தார்கள். முடியாது, முடியாது...அதெல்லாம் முடியாது....அந்தப் பையனை.... என்று கூச்சல் தொடர்ந்தது. அங்கு என்ன தான் நடந்தது?