ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் போதனைகள் மனித குலத்துக்கான சிறந்த வழிகாட்டி; துணை ஜனாதிபதி புகழாரம் | Sri Sathya Sai Baba's 100 Birthday Celebration | Sathya Sai Baba News | Sri Sathya Sai Baba | Sri Sathya Sai Baba photos | ஸ்ரீ சத்ய சாய் பாபா - 100வது பிறந்த நாள்

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் போதனைகள் மனித குலத்துக்கான சிறந்த வழிகாட்டி; துணை ஜனாதிபதி புகழாரம்


புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவியால் தான், சென்னை மக்களுக்கு இடையூறு இன்றி குடிநீர் கிடைக்கிறது, என்று, புட்டபர்த்தியில் நடந்த விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.

ஆந்திரா மாநிலம், புட்டபர்த்தியில், ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த நவ., 13ம் தேதி தொடங்கி, வரும் 24ம் தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. சத்ய சாய்பாபாவின் பிறந்த நாளான இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தங்கத் தேரோட்டத்தை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

தொடர்ந்து நடந்த விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கையும், அர்ப்பணிப்பும் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களை சேவையாற்றுவதற்கு ஊக்குவித்து வருகிறது. உலகம் முழுவதும் நிலவும் நிச்சயமற்ற தன்மை, மோதல் மற்றும் மன அழுத்தம் நிறைந்த இன்றைய சூழலில், பாபாவின் போதனைகள் தான், மனித குலத்துக்கான சிறந்த வழிகாட்டியாக உள்ளன.

ஆன்மிகம்; அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எப்போதும் உதவு, ஒருபோதும் காயப்படுத்தாதே என்பதை அனைவருக்கும் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா கற்பித்தார். அவர் தனது முழு வாழ்க்கையையும், மனிதகுலத்தின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்து, ஜாதி, மதம், வர்க்கம் மற்றும் தேசியத்தின் எல்லைகளைக் கடந்து பணியாற்றினார். கடவுள் ஒருவரே. எந்த மதமும் சமூகத்தைப் பிரிக்க முடியாது என்றார். அதுதான் சத்ய சாய்பாபாவின் மிகப்பெரிய போதனை. அவரது பணியும் வாழ்க்கையும் உண்மையான ஆன்மிகத்தை எடுத்துரைக்கிறது.

மகத்தான வாய்ப்பு; ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அறக்கட்டளை, பாபாவின் நற்பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து கொண்டு செல்கிறது. சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் சமூக நலனில் நாட்டின் எண்ணற்றவர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்து வருகிறது. நேற்று (நவ.,22) சத்ய சாய் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மகத்தான வாய்ப்பு கிடைத்தது. அதற்காக பெருமை அடைகிறேன். சத்ய சாய் அறக்கட்டளையால் வெற்றிகரமாக நடத்தப்படும் நடமாடும் கிராமப்புற சுகாதார சேவைகள் தொலைதூரப் பகுதிகளில் உள்ள சமூகங்களுக்கு பேருதவியாக இருக்கின்றன.

குடிநீர்; தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டிற்குச் சென்ற ஒரே துறவி இவர்தான். அன்புக்கும், பாசத்திற்கும் கொள்கைகள் இல்லை என்பதை இது காட்டுகிறது.

சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக என்.டி.ராமராவ், எம்ஜிஆர் ஆகியோர் ஆந்திரா, தமிழக மாநிலங்களின் முதல்வர்களாக இருந்தபோது தெலுங்கு கங்கை திட்டம் தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தை மறு உருவாக்கம் செய்து மக்களுக்கு குடிநீர் தடையின்றி கிடைப்பதற்கு பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா முன்னின்று உதவியும் ஆசியும் வழங்கினார். அதன் காரணமாகவே, சென்னை மக்களுக்கு இடையூறு இன்றி குடிநீர் கிடைக்கிறது; ஆந்திரா, தமிழக மக்களிடையே நல்லுறவு நீடிக்கவும் இந்த உதவியே காரணம்.

அன்பு, அகிம்சை; பாபாவின் போதனைகளில், உண்மை, நீதி, அமைதி, அன்பு மற்றும் அகிம்சை ஆகியவை வேரூன்றியுள்ளன. இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

விழாவில் சத்ய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர் லோகேஷ், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தமிழக அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வர் வாழ்த்து; பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாள் நுாற்றாண்டு விழா முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து கடிதத்தை, புட்டபர்த்தியில் இன்று நடந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு, சத்யசாய் அறக்கட்டளை நிர்வாகிகளிடம் வழங்கினார்.