சத்ய சாய்பாபாவின் கருணை, சேவை சமூக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது; தமிழக முதல்வர் வாழ்த்து | Sri Sathya Sai Baba's 100 Birthday Celebration | Sathya Sai Baba News | Sri Sathya Sai Baba | Sri Sathya Sai Baba photos | ஸ்ரீ சத்ய சாய் பாபா - 100வது பிறந்த நாள்

சத்ய சாய்பாபாவின் கருணை, சேவை சமூக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது; தமிழக முதல்வர் வாழ்த்து


ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம், நவ., 13ம் தேதி துவங்கி கோலாகலமாக நடந்தது. சத்ய சாய்பாபாவின் பிறந்த நாளான நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாள் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, தி.மு.க., தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


அவரது வாழ்த்து கடிதம் புட்டபர்த்தியில் நேற்று நடந்த விழாவில் சத்யசாய் மத்திய அறக்கட்டளை அறங்காவலர் ரத்னாகரிடம் வழங்கப்பட்டது. கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் கருணை மற்றும் சேவை மனப்பான்மை, பல துறைகளில் நீடித்த சமூக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித நலன் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய வேண்டும் என்ற நம்பிக்கையில், சத்ய சாய்பாபாவின் பணி அமைந்திருந்தது; உண்மையான சேவை என்பது, செயலில் வெளிப்படுத்தப்படும் இரக்கத்தின் மூலம் வாழ்க்கையை மேம்படுத்துவதில் உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை போக்கியதில், பாபாவின் பங்களிப்பு தமிழக வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயமாக உள்ளது. கிருஷ்ணா நதி நீரை, தமிழகத்துக்கு கொண்டு வரும் திட்டத்தை வலுப்படுத்துவதில் அவரது அறக்கட்டளை முக்கிய பங்கு வகித்தது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.