சாய்பாபா - பகுதி 5 | Sri Sathya Sai Baba's 100 Birthday Celebration | Sathya Sai Baba News | Sri Sathya Sai Baba | Sri Sathya Sai Baba photos | ஸ்ரீ சத்ய சாய் பாபா - 100வது பிறந்த நாள்

சாய்பாபா - பகுதி 5



சாப்பாட்டையே தொடாத நெய் வாசனை சத்யாவின் கைகளில் இருந்து வந்தது ஈஸ்வராம்பாவுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. அவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால் அவன் தெய்வம் அல்லவா? பகவான் கிருஷ்ணனின் அவதாரம் அல்லவா அவன்? அவனது கையிலிருந்து நெய் வாசம் வர கேட்கவா வேண்டும்? கோகுலத்தில் அவன் தின்னாத வெண்ணெயா? நெய்யா? அதன் மணம் எத்தனை யுகங்கள் கடந்தாலும், அவன் உடலில் அந்த வாசனை ஒட்டியிருக்கத்தானே செய்யும்? இதை அன்னையால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. சத்யாவை ராமலீலா ஊர்வல வண்டியில் ஏற்றிய அர்ச்சகரிடம், அவனை வண்டியில் எப்படி ஏற்றினீர்கள்? எனக் கேட்டார் ஈஸ்வராம்பா. குருவை ஏற்ற என்ன தயக்கம்? என்று பதிலளித்தார் அவர். குருவா? யாருக்கு யார் குரு?. அம்மா! தங்கள் மகன் இந்த ஊரில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குருவாக இருக்கிறான். அவனை தங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்டுள்ளனர் குழந்தைகள். அவர்கள் எல்லாருமாக சேர்ந்து அவனை வண்டியில் ஏற்றச் சொன்னார்கள். அவனை வண்டியில் ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னை அறியாமலே உந்தியது. அவனை ஏற்றி வந்தேன், என்றார் அர்ச்சகர். ஈஸ்வராம்பாவுக்கு தன் மகன் மற்ற குழந்தைகளை விட உயர்ந்த நிலையில் இருக்கிறான் என்பதை நினைத்து பெருமையாக இருந்தது. ஆனால் பகவானாக பிறந்தவர், தன்னை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் தானாகவே அமர்ந்து வந்தார் என்ற உண்மை அவர்கள் யாருக்கும் புரியவில்லை. குழந்தைகள் சத்யாவை விரும்ப ஒரு காரணம் இருந்தது. அவ்வூரில் திண்ணைப்பள்ளிகள் மட்டும் தான் உண்டு. எழுதப்படிக்க தெரிந்தவர்கள் சிலரே. அவர்களே ஆசிரியர்களாக இருப்பார்கள். சூரிய உதயம் ஆனவுடனேயே வகுப்புகள் ஆரம்பித்து விடும். பல குழந்தைகளின் உடம்பில் துணியே இருக்காது.

சத்யாவுக்கு ஈஸ்வராம்பா சட்டை அணிவித்து அனுப்புவார். அவன் அதிகாலை குளிரில் நடுங்கும் தன் சக நண்பர்களை பார்த்துக் கொண்டே இருப்பான். சிரமத்துடன் கல்வி கற்றனர் அவர்கள். அவர்களுக்கு சட்டை கொடுத்தால் என்ன என்ற எண்ணம் சத்யாவுக்கு ஏற்பட்டது. வீட்டில் தனக்காக வைத்திருந்த சட்டைகள், துண்டுகளை எல்லாம் எடுத்து வந்தான். குழந்தைகளுக்கு அணிவித்தான். வீட்டில் எல்லாருக்கும் இது தெரியும். ஆனால், சத்யா! இப்படி செய்யலாமா? உன் சட்டைகளை மற்ற குழந்தைகளுக்கு கொடுத்து விட்டால் நீ என்ன செய்வாய்? என்று கேட்க குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தயக்கம். தர்மவானாக அல்லவா வளர்கிறார் நமது பாபா. அவரது செயல்களை தடுக்க வல்லவர் யார்? கீதையிலே கண்ணன் சொன்னது போல, உலகில் எப்போது அநியாயம் தலைதூக்குகிறதோ அப்போது நான் அவதாரம் எடுப்பேன், என்று சொல்லியதை நிறைவேற்ற வந்துள்ள மகான் அல்லவா அவர். அவர் இன்னும் என்னென்ன அற்புதங்களை நிகழ்த்தப் போகிறாரோ? சிறு வயதிலேயே அவர் தர்ம காரியங்களுடன் அற்புதங்களையும் செய்யத் தொடங்கி விட்டார். சத்யா திண்ணைப்பள்ளிக்கூடத்தில் அடிப்படை படிப்பை முடித்து ஆரம்பக் கல்விக்காக புக்கப்பட்டணம் செல்ல வேண்டியதாயிற்று. புட்டபர்த்தியிலிருந்து 5 கி.மீ.தொலைவில் இருந்தது புக்கப்பட்டணம். காலையில் புறப்பட்டால் இருட்டிய பிறகு தான் வீடு வருவான் சத்யா. செல்லும் வழியெல்லாம் முட்புதர்கள் அடர்ந்திருக்கும். கற்கள் குவிந்து கிடக்கும். ஒரு ஆற்றிலும் இறங்கி அதை கடக்க வேண்டும். சத்யா இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்டதில்லை. அவன் தினமும் நடந்தே சென்று வருவான். இந்தக் கால குழந்தைகள் ஆட்டோவிலும், பஸ்களிலும் பள்ளிக்கு செல்கிறார்கள். அவர்கள் பாபா சிறுவயதில் தினமும் 10 கி.மீ. நடந்தே சென்று படித்து வந்ததை உணர வேண்டும். அவரை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு சிரமப்பட்டு படிக்க வேண்டும்.

சத்யாவின் நினைப்பெல்லாம் தன் சக மாணவர்களை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்வது என்பது தான். அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுப்பான். தன் சட்டை பைக்குள் கையை விடுவான். ஏதாவது பலகாரம் வரும். நண்பர்களுக்கு கொடுப்பான். எத்தனை பேர் கேட்டாலும் கொடுப்பான். சத்யா! உன் சட்டைப் பையில் ஒன்றுமே இல்லை. இருந்தாலும் கையை விட்டால் பண்டங்கள் வருகின்றன. அது எப்படி? என்பார்கள் நண்பர்கள். சத்யா அவர்களுக்கு புன்முறுவலையே பதிலாகத் தருவான். அவனது செய்கை அவர்களுக்கு ஆச்சரியம் தந்தது. அவனை புக்கப்பட்டணம் பள்ளி மாணவர்களும் குரு என்றே அழைத்தனர். பகவானுக்கு நாம் படையல் வைக்கிறோம். பூஜை முடிந்ததும் நாமே சாப்பிட்டு விடுகிறோம். இதை பிரசாதம் என்கிறோம். பிரசாதம் என்பது பகிர்ந்தளிக்கப்படுவது. ஆண்டவனுக்கு நாம் ஆத்மார்த்தமாக கொடுக்கும் பொருளை அவன் நமக்கு பகிர்ந்தளிக்கிறான் என்பதே பிரசாதத்தின் தத்துவம். ஆனால் சத்யா தனக்கென்று எதையும் எதிர்பார்ப்பதில்லை. மதிய உணவாகக் கொண்டு வரும் பழையசாதத்தையும், ஊறுகாயையும் கூட பசிக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடுவான். பள்ளிப் பிள்ளைகள் சத்யாவை ஆராய ஆரம்பித்தார்கள். சத்யாவால் எப்படி வெறும் பையில் இருந்து தின்பண்டங்கள் தர முடிகிறது என்பதே அந்த ஆராய்ச்சி. இறைவனை மனிதன் என்றுமே ஆராய்ந்து வந்திருக்கிறான். நாத்திகன் அவன் இருக்கிறானா என ஆராய்கிறான். ஆஸ்திகன் அவன் இருக்குமிடத்தையும், அங்கு சென்று எப்படி அவனை அடைவது என்றும் ஆராய்கிறான். ஆக ஆத்திகன், நாத்திகன் இருவருமே இறைவனை ஆராய்கிறார்கள். அவனைப் பார்த்து விட துடிக்கிறார்கள். அவர்கள் அவனை அடையச் செல்லும் பாதை தான் வித்தியாசமானது. சத்யாவுடன் படித்த அந்தக் குழந்தைகளும் கூட தெய்வக்குழந்தைகளே! அவர்களை நினைத்தால் ஒரு வகையில் பெருமையாகவும், ஒரு வகையில் பொறாமையாகவும் இருக்கிறது. ஏன் நாமும் அந்தக் கூட்டத்தில் ஒருவனாக இல்லை? என்றே நமக்கு எண்ணத் தோன்றுகிறது. அவரது கடைக்கண் பார்வை படாதா என்று இப்போதும் ஏங்கும் உள்ளங்கள் எத்தனை? ஆனால் அவரோடு வாழ்ந்த குழந்தைகளை, அவரது அருட்பிரசாதம் பெற்ற குழந்தைகளை வணங்கத் தோன்றுகிறது. சத்யாவிடமே குழந்தைகள் தங்கள் சந்தேகத்தை கேட்டார்கள். சத்யா..வெறும் பையிலிருந்து எப்படி பண்டங்களை வரவழைக்கிறாய்?. சத்யாவின் பதிலுக்காக அவர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.