Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பார்வதி கல்யாணம்
 
பக்தி கதைகள்
பார்வதி கல்யாணம்


வா. ஜானகிராமன்

பிரகஸ்பதி கூறியதை கேட்டுக் கொண்டிருந்த பிரம்மன், தேவர்கள் அனைவருக்குமான பதில் சொல்கிறான்.  
‘‘என் குழந்தைகளே, உங்கள் வேண்டுகோள் நிச்சயமாய் நிறைவேறும்.  சற்று பொறுத்திருங்கள்.  ஆனால் நீங்கள் கேட்கும் சேனைத்தலைவனை நான் படைக்கப்போவதில்லை.  காரணம், தாரகன் அடைந்துள்ள செல்வமும் பலமும் என்னால் வரமாக கொடுக்கப்பட்டவை.  விஷ மரமாக இருந்தாலும், வளர்த்தவன் அதை அழிக்கக்கூடாது.  ஏன் இப்படி தாரகனுக்கு வரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றலாம்.  அவன் செய்த தவம் உலகையே பொசுக்கியிருக்கும். உலகை காக்கவே, அவனுக்கு கேட்ட வரங்கள் தந்து அவனை அடக்கினேன்.  
“அவனை அழிக்கக்கூடிய சக்தி, சிவபெருமானின் மகனுக்கு மட்டுமே உண்டு.  சிவபெருமானின் மனம் இப்பொழுது தவத்தில் ஈடுபட்டு உறுதியாக உள்ளது. அவர் மனத்தை அங்கு அவருக்கு பணிவிடை செய்து கொண்டிருக்கும் பார்வதியின் பக்கம் திருப்ப முயற்சி செய்யுங்கள். அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும்.  சேனாதிபதியை படைக்கும் ஆற்றல் பார்வதிக்கு மட்டுமே உண்டு. சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் பிறக்கும் மகன், உங்கள் சேனைக்குத் தலைவனாக இருந்து, தாரகனை வதம் செய்வான்’’
இப்படி சொல்லிவிட்டு பிரமன் மறைந்து விட்டார்.
இந்திர சபை கூடி,  பெருமானின் மன உறுதியையும், தியானத்தின் நிலைகுலையா தன்மையையும் சற்று அசைத்து பக்கத்திலிருந்து பணிவிடை செய்துகொண்டிருக்கும் பார்வதியின் மீது எப்படி திருப்புவது என்பது பற்றி ஆலோசனைகள் நடந்தன.  சிவபெருமானிடம் நேரில் சென்று இதற்காக எதாவது முயற்சி செய்ய எந்த தேவருக்கும் துணிவோ, சக்தியோ சுத்தமாக கிடையாது.  அத்தகைய நினைப்பே கிலி ஊட்டியது.  என்ன செய்யலாம்?
வெகு நேரம் சிந்தித்து, இந்திரன் ஒரு முடிவுக்கு வந்தான்.  யாரிடம் என்ன திறமை உள்ளது என்பதை இந்திரன் நன்கு அறிவான். சிவபெருமான் நிஷ்டையில் தியானத்தில் உள்ளார்.  அவர் நிஷ்டை கலைந்து, காதல் வயப்பட அதற்கான சூழ்நிலை உருவாக வேண்டும். அந்த சூழ்நிலையை உருவாக்க மன்மதன் ஒருவனால் மட்டுமே முடியும். அவன் மூலமாகத்தான் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.  மன்மதனும் தேவர்களில் ஒருவன்தான். இந்திரனுக்கு கட்டுப்பட்டவன்தான். இந்த முடிவுக்கு வந்த இந்திரன் உடனே, மன்மதனை நினைத்தான்.  
நினைத்தவுடன், மன்மதன் அழகிய பெண்களின் புருவம் போல வளைந்த முனைகளுடன் கூடிய, தனது மலர் வில்லை (மன்மதனுக்கு கரும்பு வில்லும் உண்டு) தோளில் மாட்டிக்கொண்டு, அவன் நண்பன் வசந்தனுடன் இந்திரன் முன்னே தோன்றினான்.  வசந்தன் தன் கையில் மாந்தளிர் வில்லை வைத்துக் கொண்டிருந்தான்.
மன்மதன் புறப்படும் பொழுது அவன் கழுத்தை கட்டிக்கொண்டு விடை கொடுத்த ரதியின் கை வளையல்கள் அவன் கழுத்தில் பதிந்து ஏற்படுத்திய சுவடுகள் நன்றாக தெரிந்தன.  ஒருசமயம் அவைகளை மறைப்பதற்காக மன்மதன் வில்லை தோளில் வைத்திருக்கலாம் என்கிறான் மகாகவி காளிதாசன்.
இந்திரன் தேவர்களுக்கு அதிபதியாய் இருந்தாலும், உயர்ந்த எண்ணங்களும், உதார குணமும் உடையவன் இல்லை.  பொதுவாகவே நம் இதிகாசங்களும், புராணங்களும் இந்திரனை உயர்ந்த இடத்தில் வைத்து போற்றுவதில்லை.  காரணம் இந்திரன் கொஞ்சம் சுயநலம் பிடித்தவன். பெண்ணாசை பிடித்தவன். இதனாலேயே அடிக்கடி ஏடாகூடமாக எதாவது செய்து வம்பில் மாட்டிக்கொண்டவன். யாராவது தவம் செய்ய ஆரம்பித்தாலே இந்திரன், தன் பதவியை அடையத்தான் இந்த தவம் என்று நினைக்கக்கூடியவன்.  யாராவது மோட்சத்தை அடைய தவம் செய்தால் கூட அவனுக்கு பொறுக்காது. அதனால்,அந்த தவத்தை கலைக்க எதையாவது செய்வான். அதன் பலன் பல சமயங்களில் அவனுக்கே கேடாக முடிந்ததுண்டு.  
ஏதாவது ஒரு பலனை கருதிதான், பொதுவாக பெரிய மனிதர்கள், தாழ்ந்த நிலையில் உள்ள சாதாரணமான ஒருவனிடம் ஆதரவு காட்டி கொண்டாடுவார்கள்.  அந்த காரியம் முடிந்ததும், அந்த ஆதரவு நின்றுவிடும்.  இந்திரன் இதற்கு விதிவிலக்கல்ல. இப்பொழுது மன்மதனின் உதவி அவனுக்கு தேவை.  அதனால், பக்கத்தில் இருந்த தேவர்களை அவ்வளவாக பொருட்படுத்தாமல், மன்மதனை தன்னருகில் உள்ள ஒரு உயர்ந்த இருக்கையில் அமரச் செய்தான்.  மன்மதனுக்கு தலை கால் புரியவில்லை.  இப்படிப்பட்ட ஒரு உபசாரத்தை மன்மதன் இந்திரனிடமிருந்து எதிர் பார்க்கவில்லை. இந்த பேரருளை நினைத்து புளாகாங்கிதமும், பெருமையும் அடைந்த மன்மதன், இந்திரனை தலை தாழ்த்தி வணங்கிவிட்டு இருக்கையில் அமர்ந்தான்.
மன்மதன் இந்திரனுடன் நெருக்கமாக அமர்ந்திருந்தான்.  அதனால், பிறர் காதில் விழாதபடி மன்மதன் இந்திரனுடன் பேச ஆரம்பித்தான்.  ‘‘அரசே! ஒவ்வொரு மனிதனின் தனிச் சிறப்பை தாங்கள் நன்கு அறிந்தவர்கள். என்னை அழைத்ததற்கு நிச்சயமாக ஏதாவது ஒரு வலுவான காரணம் இருக்க வேண்டும்.  என்னை அழைத்ததையே நான் பெரிய அருளாக நினைக்கிறேன்.  என்னை ஏதாவது செய்யும்படி ஆணையிட்டால் அதை நான் பேரருளாக பாவித்து தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றுவேன்”
இப்படி சொல்லிவிட்டு, இந்திரன் என்ன ஆணையிடப்போகிறான் என்று எதிர்பார்ப்பது இயற்கை. ஆனால், மன்மதன் மிகுந்த உற்சாகத்தில் இருந்தான். அந்த போதையில், இவனாகவே தன்னால் எத்தகைய உதவிகளை இந்திரனுக்கு செய்ய முடியும் என்று சொல்ல ஆரம்பிக்கிறான்.
ஒரு முரண் தெரிகிறது.  பேச ஆரம்பிக்கும் முன் ‘‘ஒவ்வொரு மனிதனிடமும் என்ன தனித் திறமை உள்ளது என்று தங்களுக்கு தெரியும்’’ என்று சொன்னவன் இப்பொழுது தன்னால் என்ன செய்ய முடியும் என்று சொல்வது தேவை இல்லை. ஆனாலும், சொல்கிறான்.  
‘‘எவன் நெடுங்காலம் தவம் செய்து தங்கள் நிம்மதியை கெடுக்கிறான்? சொல்லுங்கள், அவனை என் வில்லின் மகிமையால், தவத்தை விட்டு காமத்தில் வீழும்படி செய்கிறேன்’’
மன்மதனுக்கு இந்திரனின் சுபாவம் தெரியும்.  அதனால், அவன் பதவிக்கு ஏதாவது ஆபத்து வந்துவிட்டதோ என்று முதலில் வினவுகிறான்.
தவம் செய்வது ஒரு சிறப்பான உயர்ந்த செய்கை. ஆனால் இந்திரன் அசூயை உள்ளவன். அதனால் குணத்தையே குற்றமாக நினைப்பவன்.  
‘‘எவன், இனி மறுபிறவி வேண்டாம் என்று நினைத்து மோட்சத்தை வேண்டி தங்கள் விருப்பத்திற்கு மாறாக தவமியற்றுகிறான்? சொல்லுங்கள்.  அவனை  அழகான பெண்களின் கடைக்கண் பார்வைக்கு வசப்பட்டு தன்னிலை இழந்து நிற்கும்படி செய்கிறேன்’’  
பொதுவாகவே, மோட்சம் விரும்புகிறவர்களையும் இந்திரன் வெறுப்பதாகத்தான் கூறுவர்.
சுக்கிராச்சாரியார் அசுர குரு. தேவர்களின் குரு பிரகஸ்பதி.  முக்கியமாக சுக்கிராச்சாரியாரிடம் பயின்றவர்கள் செல்வம் சேர்ப்பது, அதை பத்திரமாக பாதுகாப்பது பற்றி நன்கு அறிவார்கள்.  
மன்மதன் தொடர்கிறான்.  
‘‘தங்கள் எதிரிகளில் எவன் பொருளையும் தர்மத்தையும் சேர்த்து வைத்துள்ளான். அவன் சுக்கிராச்சாரியாரிடம் பயின்றவனாயினும், அவன் மனதில் காம இச்சையை கிளப்பி, அவனுடைய பொருள், தர்மம் இரண்டையும் இழக்கும்படி செய்கிறேன்’’
‘‘கற்புக்கரசியான எந்த அழகியை நீங்கள் விரும்புகிறீர்கள்.  அவளை உங்கள் வசப்பட வைக்கிறேன்’’
‘‘காதலில் தவறு இழைத்து, அதற்கு மன்னிப்பு கேட்ட பிறகும் எந்தப் பெண்ணாவது உங்களை உதறித் தள்ளி அவமதித்திருக்கிறாளா? அவள் பெயரைச் சொல்லுங்கள். அவளுக்கு உங்கள் மீது இச்சையை உருவாக்கி, உங்களிடம் சேர வைக்கிறேன்’’
‘‘உலகை காக்க உங்களிடமிருந்து வஜ்ராயுதம் சிறிது ஓய்வில் இருக்கட்டும். என் பாணங்கள் உங்கள் பகைவரை அஞ்சி நடுங்கச் செய்யும்’’
"அரசரே! நான் மிருதுவான மலர்களால் ஆன வில்லை உடையவன்தான். ஆனால், என் நண்பன் வசந்தன் ஒருவனை மட்டுமே என்னுடன் வைத்துக்கொண்டு,  பினாகம் என்ற மாபெரும் வில்லை கையிலேந்திய சர்வேஸ்வரனையே, மன உறுதி இழக்கச் செய்வேன். மற்றவர்களை பற்றி கூறத் தேவையில்லை. அவர்கள் என்முன் வெறும் பதர்கள்’’
இத்துடன் மன்மதன் தன் பேச்சை நிறுத்திக் கொள்கிறான்.
சர்வேஸ்வரன் என்ற வார்த்தையை கேட்ட உடனே, இந்திரன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.  இந்திரன் விரும்பும் காரியம் சிவபெருமானின் மனத்தைக் கவர்வது. மன்மதனும் அதையே செய்வதாக சொன்னான்.
மன்மதன் பேசி முடித்ததும், இந்திரன் மன்மதனிடம், ‘‘அப்பா! நீ சிவபெருமான் மீது உன் பணத்தை செலுத்தி அவர் உறுதியை இழக்கச் செய்வது சாத்தியம் என்று கூறினாயே, அதுவே எனக்கு போதும்.  நாங்கள் விரும்புவதும் அதுதான்’’  ‘‘தேவர்கள் அனைவரும் சிவபெருமானது மகனைத் எங்கள் சேனைத் தலைவனாக வைத்து வெற்றி அடைய விரும்புகின்றனர்.  ஆனால், பெருமானோ, தற்சமயம் மனத்தை அடக்கி, தியானத்தில் இருக்கிறார். அவருடைய தியானதைக் கலைத்து, அவருக்கு பணிவிடை செய்து கொண்டிருக்கும் பார்வதியின் மீது அவருக்கு காதல் இச்சை உண்டாக நீ உதவ வேண்டும்.  பிரம்மதேவரும் சிவபெருமானுக்கு ஏற்ற மனைவி பார்வதிதான் என்று கூறியுள்ளார்.
...........


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar