Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தர்மமா, நன்றிக் கடனா?
 
பக்தி கதைகள்
தர்மமா, நன்றிக் கடனா?

அனுமன் அழித்துவிட்டுப் போன இலங்கை அலங்கோலமாகி விட்டது. தனி ஒரு நபராக அதுவும் குரங்காக வந்து இழைத்திட்ட சேதம் அளவிட முடியாததாக இருந்தது.
இதைக் கண்டு கோபமுற்றாலும் உடனே மனம் தெளிந்தான் ராவணன். ஏனென்றால் தன்னுடைய தேசத்துக்கு எத்தகைய இழப்பு ஏற்பட்டாலும் அதை மீட்டுக் கொள்ளும் ஆற்றல் கொண்டவனாக இருந்தான் அவன். ஆமாம் இவனுக்குக் குற்றேவல் செய்யுமளவுக்கு பிரம்மனும் இவனிடம் அடிமைப்பட்டுக் கிடந்தான். அந்த நான்முகனுக்கு இவன் ஆணையிட, அவன் தேவதச்சன் மூலமாக இலங்கைக்குப் புத்துயிர் ஊட்டினான். புதுப்பித்தான், புதுமை சேர்த்தான், புதியதோர் இலங்கையை உருவாக்கினான்.
இதைக் கண்டு மேலும் இறுமாந்தான் ராவணன். பிரம்மனே தனக்கு அடிபணிகிறான் என்னும்போது வேறு எந்த எதிர்ப்பு தன்னை வெற்றி கொள்ளும் என்று ஆணவ அகங்காரம் வலுப்பெற்றான். அதனாலேயே தம் தம்பியரையும், அரச பிரமுகர்களையும் அழைத்து சீதையைத் தான் அடையவிருப்பதையும், ராமனை எதிர்ப்பது பற்றியும் அவர்களிடம் ஆலோசனை கேட்டான். அதாவது தன் கருத்துக்கு அவர்களிடம் மறுப்பு இருக்கக் கூடாது என்ற அலட்சிய கர்வமும் அவனுக்கு இருந்தது.
அநேகமாக எல்லோருமே அவன் எதிர்பார்த்தபடி அவன் கருத்தையும், திட்டங்களையும் பாராட்டினார்கள், அவனுக்குச் சாதகமான பதிலையே தந்தார்கள் என்றாலும், இப்போது கும்பகர்ணனும், ஆரம்பத்தில் இருந்தது போலவே விபீஷணனும் அவனுக்கு எதிரான கருத்துகளை முன் வைத்தார்கள்.
சீதையைக் கடத்தி வந்ததில் இருந்தே ராவணனுடைய எல்லா செயல்களுக்கும் வெளிப்படையாக விபீஷணன் தன் எதிர்ப்பைக் காட்டியிருந்தான் என்றாலும், கும்பகர்ணன் இப்போதுதான் ராவணனுக்கு எதிரான மாற்றுக் கருத்தைத் தெரிவித்தான்.  இதிலும், ‘இப்போது எங்களிடம் யோசனை கேட்கிறாயே, இதற்கு முன்பு சீதையை சம்பந்தப்பட்ட உன் எந்த நடவடிக்கைக்கு எங்களிடம் ஆலோசனை கேட்டாய்?’ என்ற அளவில்தான் கோபப்பட்டானே தவிர, அண்ணன் செய்தது தவறு என்று முற்றிலுமாக மறுக்கவில்லை.
ராவணனோ, ‘நீ எப்போது பார்த்தாலும் துாங்கிக் கொண்டே இருந்தாய், உன்னிடம் வந்து என்ன யோசனையை நான் கேட்பது’ என்று விரக்தியாக கும்பகர்ணனிடம் பதிலளித்தான்.
தன்னுடைய பலவீனத்தை ராவணன் குத்திக் காட்டுவதைக் கேட்ட கும்பகர்ணன் அதற்கு மேல் எதுவும் பேசத் தோன்றாதவனாக இருந்தான்.
தன் கருத்துக்கு எந்த ‘மறுப்பும்’ யாரிடமிருந்தும் வராததால், தான் செய்வன எல்லாமே சரியானவைதான் என்ற ‘முடிவு’க்கு வந்தான் ராவணன். ஆகவே ராமனை எதிர்த்து அவனை வீழ்த்தி சீதையைத் தன்னுடையவளாக ஆக்கிக் கொள்ளும் எண்ணத்திற்கு மேலும் வலுவூட்டிக் கொண்டான்.
தனிமையில் அண்ணன் கும்பகர்ணனைச் சந்தித்தான் விபீஷணன். ‘‘ஏன் நீங்களும் பேசாமடந்தை ஆகி விட்டீர்கள்? சீதையை ராமனிடம் ஒப்படைக்க வேண்டியதுதான் நியாயம், அவ்வாறு அபகரித்த குற்றத்துக்காக ராமனிடம் மன்னிப்புக் கோரி சரணடைவதுதான் தர்மம் என்று ஏன் ராவணனிடம் வலியுறுத்தவில்லை? அவனுடைய அநியாயத்துக்கும், அதர்மத்துக்கும் நீங்களும் துணைபோவீர்கள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை’ என்று மனம் வெதும்பிப் பேசினான்.
‘உன்னைப் பார்த்தால் எனக்குச் சிரிப்பாக வருகிறது விபீஷணா. ராவணன் என்றைக்காவது, எதற்காகவாவது நம் பேச்சை கேட்டிருக்கிறானா? என்னுடைய துாக்க சாபத்தை சாக்காகச் சொல்லி, என்னிடம் கேட்க இயலாததை வெளிப்படுத்துகிறான். நான் என்ன செய்ய?’ என்று மனத்தாங்கலுடன் பதிலளித்தான் கும்பகர்ணன்.
‘சரி, அதற்காக அக்கிரமத்துக்கு சாமரம் வீசிக் கொண்டிருப்பதும் முறையா? பெரிய அண்ணன் ராவணனைத் திருத்த ஒரே வழி, இவனை விட்டுப் பிரிந்து நாம் ராமனிடம் சரணடைவதுதான். அப்போதாவது இவனுக்கு புத்தி வந்து, சீதையைக் களவாடி வந்ததால் சகோதரர்களையே இழக்க வேண்டியிருக்கிறதே என்று தோன்றாதா? அப்போதாவது சீதையை ராமனிடம் ஒப்படைத்து மன்னிப்பு கேட்டு அவனது இனிய நட்பைப் பெற்றுக் கொள்ள மாட்டானா?’
வெறுமையாகச் சிரித்தான் கும்பகர்ணன். ‘இந்த பந்தத்தை வெட்டிக் கொள்ளும்படி எவ்வளவு சுலபமாகச் சொல்லிவிட்டாய் விபீஷணா! என்னால் அது இயலாது. என் உடலில் ஊறும் உப்பு ராவணன் இட்டது. அத்தகைய உடல் பராமரிப்புக்கு மட்டுமன்றி, பிற நாடுகள், மன்னர்கள் மீது போர்த்தொடுக்கவும், அவர்களை வெற்றி காணவும், அந்நாடுகளைத் தன் ஒரு குடைகீழ் கொண்டுவரவும் எனக்கு வாய்ப்பளித்தமைக்கும் நான் அவனுக்கு வாழ்நாள் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.  அதனால் அவனை விட்டுப் பிரிந்து என்னால் வர இயலாது’ என்று உறுதியாகச் சொன்னான்.
விபீஷணன் எதுவும் சொல்லத் தோன்றாமல் தலை குனிந்து நின்றிருந்தான்.
‘ஆனால் ஒரு ஆறுதல்’ என்ற கும்பகர்ணன் தொடர்ந்து சொன்னான். ‘நான்முகனை நோக்கி நான் கடுந்தவம் மேற்கொண்டேன். என்றும் அழிவில்லாதவனாக, நிரந்தரனாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த வரத்தைத் தருமாறு நான் கோரிய போது சிறு தவறைச் செய்துவிட்டேன். ஆமாம், ‘எனக்கு ‘நித்தியத்துவம்’ அளிக்க வேண்டும்’ என்று கேட்பதற்கு பதிலாக, ‘நித்திரைத்துவம்’ என்று கேட்டுவிட்டேன். அதாவது நிரந்தரம் என்பது நித்திரையாகி விட்டது. இது ஒரு தகுதியற்ற, அதிகப்பிரசங்கித்தனமான கோரிக்கை என்பதாலோ, ஒரு அரக்கன் இவ்வாறு நிரந்தரமாக இவ்வுலகில் தங்கிவிட்டானானால் அவனுடைய அடிப்படை குணத்தால் ஒட்டு மொத்த பூமியே அல்லலுறும் என்று கருதியதாலோ என்னவோ, சரஸ்வதி தேவி என் நாவை இடற வைத்து விட்டாள். ஆனால் இதுவும் நன்மைக்கே என்றுதான் நான் எடுத்துக் கொண்டேன். ஆமாம், நம் அண்ணன் ராவணனின் கொடுஞ்செயலுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாத வகையில் நான் நெடுந்துயில் கொள்கிறேன் அல்லவா? அப்படிப் பார்த்தால் நான் என்னை அறியாமல் கொஞ்சமாவது  தர்மத்துக்கு கட்டுப்பட்டிருக்கிறேன் என்றுதானே சொல்ல வேண்டும்?’
கும்பகர்ணனின் தர்மசங்கடத்தை விபீஷணன் புரிந்து கொண்டான். தர்மத்தின் சார்பாகவும் அவனால் செயலாற்ற இயலவில்லை; சகோதரத்துவம் காரணமாக அதர்மத்துக்கு சார்பாகச் செல்லவும் மனசில்லை. ஆனால் இரண்டையும் தராசுத் தட்டில் வைத்துப் பார்த்த போது அவனுக்கு சகோதரத்துவம்தான் பெரிதாக இருக்கிறது; அதனால் ராவணனை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்து விட்டான். இதனால் தனக்கே முடிவு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற முடிவு!
அதேபோல் விபீஷணனும் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். தர்மத்தின் பக்கமே நிற்பது என்று. எவ்வளவோ அறிவுறுத்தியும் ராவணன் தன் வாதத்தின் நியாயத்தை ஏற்க விரும்பாதவனாக இருக்கிறான். ஆகவே இப்படி கண்ணுக்குத் தெரிந்தே ஒரு கொடுமைக்கு ஆதரவு கொடுப்பதைவிட, நியாயவான் பக்கம் சேர்ந்துவிடுவதே சிறந்தது என்று உறுதி கொண்டான்.
அதை கும்பகர்ணனிடம் அவன் தெரிவித்தபோது, ‘இது உன்னுடைய விருப்பம், தீர்மானம். எப்படி என் கருத்துக்கு நீ எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்க முடியாதோ, அதேபோல நான் உன்னுடைய கருத்துக்குத் தெரிவிக்க முடியாது. நீ உன் இஷ்டம் போலச் செய். என்னை என் இஷ்டம்போல செயல்பட விடு’ என்று அவன் இயல்பாகச் சொல்லிவிட்டான்.
உடனே அவனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தன் மகள் திரிசடையிடம் வந்தான் விபீஷணன். ‘நான் ஸ்ரீராமனை சரணடைவது என முடிவெடுத்திருக்கிறேன். இதனால் ராவணன் என்மீது கடும் கோபம் கொள்ளக் கூடும். கைமீறி போன பிறகு என்னை ஒன்றும் செய்ய இயலாது என்ற ஆற்றாமையால் அவன் உன்னைத் துன்புறுத்தலாம். உன்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியுமா’ என தந்தைப் பாசத்தால் கண்கலங்கக் கேட்டான்.
புன்முறுவல் மாறாத திரிசடை, ‘எனக்கு நம்பிக்கை இருக்கிறது அப்பா. ஸ்ரீராமன் நிச்சயம் இங்கு வந்து சீதையை மீட்டுச் செல்வார். அங்கே அவருக்கு நீங்கள் பக்க பலமாக இருந்து இந்த மீட்சிக்கு உதவுங்கள். அதுவரை நான் இங்கே சீதைக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருக்கிறேன். பெரியப்பா ராவணன் எந்தக் கொடுமையும் செய்ய மாட்டார் என்றே நம்புகிறேன். ஏனெனில் ராமனுடனான போர் பற்றியே அவர் கவனம் செலுத்துவார். அதோடு சீதையை ராமனால் மீட்கவே முடியாது என்றும் தன் பராக்கிரமம் மீது அதீத நம்பிக்கை கொண்டிருப்பார். ஆகவே என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள், நீங்கள் உங்கள் தர்ம லட்சியத்தை நோக்கித் தயங்காமல் பயணம் மேற்கொள்ளுங்கள்’ என்று உறுதியாகச் சொன்னாள்.
ராமனிடம் அடைக்கலம் புக, விபீஷணன் தன் மாய சக்தியால் வான் வழியாகப் பறந்து சென்றான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar