Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தீக்குளித்தவனின் தியாகம்
 
பக்தி கதைகள்
தீக்குளித்தவனின் தியாகம்

‘‘நேத்து மதியம் ஒரு ஆளு தீக்குளிக்க முயற்சி செஞ்சிருக்காரு. நல்லவேளையா காப்பாத்திட்டாங்க. லேசான தீக்காயம்தான். சீக்கிரம் ஆறிரும். ஆனா மனசுல பெரிய காயம் இருக்கு. மனுஷன் நிலைகுலைஞ்சி போயிருக்காரு. எதுவும் பேச மாட்டேங்கறாரு. பயமா இருக்கு‘‘
அலைபேசியில் பதறியது மருத்துவர் லட்சுமி
‘‘அவரப் பத்தி…’’
‘‘பேரு ரவி. பேங்க் ஆபீசரா இருந்தவரு. ரிட்டயர் ஆயிட்டாரு. மனைவி இல்லை.  ஒரே மகள். அமெரிக்கால இருக்கா’’
‘‘ஒண்ணும் புரியல. ஏதாவது தெரிஞ்சா வந்து பாக்கறேன். அவருக்காகப் பிரார்த்தனை பண்ணுங்க’’
இரண்டு நாள் ஆகியிருக்கும். மாலை நேரம். நடந்து கொண்டிருந்தேன்.
‘‘என் மனதிற்கினியவன் மனம் வாடியிருக்கிறான். உடனே போய்ப் பார்க்காமல் அக்கடாவென்று நடந்து கொண்டிருக்கிறாயே
துாய்மைப் பணியாளர் வடிவில் நின்ற துாயவளை விழுந்து வணங்கினேன்.
‘‘போய்ப் பார்.  என்ன பேசவேண்டும் என அப்போது தெரியப்படுத்துகிறேன்’’
ரவி இருந்த மருத்துவமனைக்கு ஓடினேன். லட்சுமி வாசலிலேயே காத்திருந்தாள். ரவியின் அறைக்கு ஓடினோம்.
ரவியின் கையை இறுகப் பற்றியபடி பச்சைப்புடவைக்காரியிடம் பிரார்த்தனை செய்தேன்.
ரவி பேசத் தொடங்கியவுடன் மற்றவர்களை வெளியே அனுப்பினேன். அவர் பேசியதன் சாரம் இதுதான்.
இருபது நாட்களுக்கு முன் ரவி அவர் நண்பருடன் ஒரு நாடி ஜோதிடரை பார்த்திருக்கிறார். நண்பரின் வாழ்வில் நடந்ததை புட்டுப் புட்டு வைத்திருக்கிறார் ஜோதிடர். பின்னர் ரவியிடம், ‘உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சிக்கணுமா?’ எனக் கேட்டிருக்கிறார்.
‘‘எனக்குப் பச்சைப்புடவைக்காரிதான் எல்லாம். அவ கொடுத்த பிரச்னைகள அவளது பிரசாதமாத்தான் பாக்கறேன். என் எதிர்காலத்தப் பத்திப் பச்சைப்புடவைக்காரிக்குத் தெரியும். எதையும் தெரிஞ்சிக்கணுங்கற அவசியம் இல்ல’’
ஜோதிடருக்குக் கோபம் வந்துவிட்டது.
‘‘நீங்க முற்பிறவில பெரிய பாவம் செஞ்சிருக்கீங்க. உங்க முழுப்பெயர், பிறந்த தேதியை சொல்லுங்க’’
ரவி சொன்னார். ஜோதிடர் சில நிமிடம் தியானம் செய்தார். பின் உள்ளே சென்று பல ஏட்டுச் சுவடிகளை எடுத்து வந்து குற்றம் சாட்டும் குரலில்,  
‘‘முந்திய பிறவியில ஒரு குறுநில மன்னர்கிட்ட அமைச்சரா இருந்தீங்க. மன்னருக்கு அம்மன் மீது பக்தி அதிகம். ஒரு ஊர்ல அம்மன் கோயில் கட்டச் சொல்லி மூட்டை மூட்டையா பொற்காசுகளக் கொடுத்து அனுப்பிச்சாரு. நீங்க அந்த ஊருக்குப் போனீங்க. ஆனா கோயில் கட்டல. மன்னரோட காசுல மது, மாதுன்னு செலவழிச்சீங்க. மன்னருக்குக் கோபம் வந்து உங்களப் பிடிக்க ஆளுங்கள அனுப்பின போது பொண்டாட்டி புள்ளைங்களோட தப்பி ஓடிட்டீங்க. கோயில் கட்ட கொடுத்த பணத்த உங்க சந்தோஷத்துக்கு செலவழிச்சது மகா பாவம். இப்பக்கூட உங்க மனைவி அற்பாயுசுல போனதுக்கு அதுதான் காரணம்’’
இதைக் கேட்ட ரவி மயங்கி விழுந்தார். நண்பர் எப்படியோ அவரை ஊரில் கொண்டு சேர்த்துவிட்டார். ரவியால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.
‘‘தாயே! நீங்கள் என்னை மன்னித்தாலும் நான் என்னை மன்னிக்க மாட்டேன். உங்கள் கோயில் காசைத் திருடிய பாவத்திற்காக தீயில் கருகிச் சாகப் போகிறேன்’’
அன்று மதியம் ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் இருந்த அம்மன் கோயிலுக்கு முன்பு தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைக்க முயன்றார் ரவி. நல்லவேளையாக தீப்பற்றியதும் யாரோ ரவி மீது பாய்ந்து அணைத்தனர். லேசான காயங்களுடன் ரவி தப்பினார்.
‘‘நீங்க ஆயிரம் சமாதானம் சொன்னாலும் சரி, நான் தீக்குளிச்சித்தான் சாவேன். பெத்த தாயவிட அதிகமா நேசிக்கற பச்சைப்புடவைக்காரியோட காசைத் திருட்டிட்டேனே சார்!  தீக்குளிப்பது குறைஞ்சபட்ச தண்டனை. முடிஞ்சாத் தடுத்துப் பாருங்க’’
திகைத்தேன். பச்சைப்புடவைக்காரி என்னுள் வார்த்தைகளாக மலர்ந்தாள்.
‘‘தீக்குளிக்கறதுதான் சரி. தாராளமாத் தீக்குளிங்க. ஆனால் இப்போ வேண்டாம். நாள் நட்சத்திரம் சரியில்ல. தை மாசம் தீக்குளிச்சா பாவமும் போயிரும். அடுத்த பிறவியும் இருக்காது’’
ரவி என்னையே முறைத்துப் பார்த்தார்.
‘‘இன்னும் நாலு மாசம் சாதாரணமா வாழுங்க. இனிமே இந்த ஊர்ல இருக்க வேண்டாம். எப்படியும் உங்களத் தனியா இருக்க விடமாட்டாங்க. கோயம்புத்துாருல ஒரு முதியோர் இல்லத்துல போய்ச் சேர்ந்திருங்க. தீக்குளிக்கும் போது சொல்லியனுப்பிச்சா நானும் வந்து பாக்கறேன்’’
‘‘உங்கள நம்பலாமா?‘‘
‘‘வேண்டாம். பச்சைப்புடவைக்காரிய நம்பலாம். நான் சொல்றது அவளோட வார்த்தைகள். அப்புறம் உங்க இஷ்டம்’’
பதிலுக்குக் காத்திராமல் அறையைவிட்டு வெளியேறினேன்.
டாக்டர் லட்சுமியும், ரவியின் மகளும் ஒரே குரலில் கேட்டனர்.
‘‘என்னாச்சு?’’
‘‘ஆகவேண்டிய காரியத்தையும் போகவேண்டிய வழியையும் சொல்லிட்டேன் அதுக்கப்பறம் ரவியாச்சு பச்சைப்புடவைக்காரியாச்சு, எனக்கென்ன வந்தது’’
மருத்துவமனையை விட்டு வெளியேறினேன்.  
காரில் தனியாக அமர்ந்திருந்தேன். பச்சைப்புடவைக்காரியின் மனதிற்கினிய மகனாயிற்றே ரவி? அவருக்கு ஏன் தீக்குளித்துச் சாகும் கொடிய மரணத்தை  விதித்தாள்? அழுகையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.
கார் கண்ணாடியை யாரோ தட்டினார்கள். சுதாரிப்பதற்குள் ஒரு பெண் கதவைத் திறந்து ஏறினாள்.  
‘‘ரவிக்கு மரணத்தைத் தருவதென்றால் அன்றே கொடுத்திருப்பேனே! அன்று வேறு உருவில் போய் காப்பாற்றியது நான்தான். கிடைத்தற்கரிய பேற்றை ரவிக்குத் தரப் போகிறேன். அடுத்து என்ன நடக்கப் போகிறது எனக் காட்டுகிறேன் பார்’’
ரவி மருத்துவமனையிலிருந்து வெளியேறியதும் கோவையில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்ந்தார். அவரது மகள் நிம்மதியாக அமெரிக்கா கிளம்பிப் போனாள்.
முதியோர் இல்லத்தில் வசதியாக வாழ்ந்த ரவி தை மாதத்திற்கு நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார். ரவி நேர்மையான வங்கி அதிகாரி என்பதை அறிந்த முதியோர் இல்லத்தின் தலைவர் அவரை நிர்வாகக் குழுவில் சேர்த்துக் கொண்டார். ரவி உற்சாகமாக உழைத்தார்.
தை மாதமும் வந்தது. ரவி பரபரப்பானார். அன்று முதியோர் இல்லத்தில் பொங்கல் விழாக் கொண்டாட்டம். முதியோர் இல்லத்தின் தலைவர் மேடையில் முழங்கினார்.
‘‘நமது முதியோர் இல்லத்தில் ஒரு அம்மன் கோயில் கட்டவேண்டும் என்பது என் நெடுநாளைய ஆசை. அந்தப் பொறுப்பை ஏற்க சரியான ஆள் கிடைக்காததால் தள்ளிக்கொண்டே போனது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். நேற்று என் கனவில் பச்சைப்புடவைக்காரி வந்தாள். கோயில் கட்டும் பொறுப்பை ரவியிடம் விட்டு விடு என ஆணையிட்டாள். எத்தனையோ பிறவிகளாக ரவி எனக்குக் கோயில் கட்டவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பிறவியில் அது நிறைவேறட்டும் என்றாள்’’
ரவி பெரிதாக அழத் தொடங்கிவிட்டார்.
‘‘தாயே ரவி முற்பிறவியில் கோயில் கட்டும் காசைத் திருடியது உண்மையா?’’
‘‘இல்லை. அந்த ஜோதிடன் ரவியின் மீதுள்ள கோபத்தால் அப்படி சொன்னான். ஆனால் ரவி கோயில் கட்டாவிட்டால் அவனால் நிம்மதியாக வாழ முடியாது. அதனால்தான் அப்படிச் செய்தேன். அவன் பிரச்னை தீர்ந்தது. உனக்கு என்ன வேண்டும்? நீயும் எனக்குக் கோயில் கட்டுகிறாயா’’
‘‘வேண்டாம் தாயே. என் மனம் என்னும் கோயிலில் நிரந்தரமாகக் குடியேறி விட்டீர்களே. இருந்தாலும் ஒரு குறை…’’
‘‘என்ன’’
‘‘என் மனதில் நிறைய அழுக்கு இருக்கிறது. உங்கள் கோயில் பிரகாரம் அசுத்தமாக இருப்பது போல் என்னை அது உறுத்துகிறது. என் மனதைத் துாய்மைப்படுத்துங்கள். அது முடியாதென்றால் என்னை ஒட்டுமொத்தமாக அழித்துவிடுங்கள், தாயே! அழுக்கு நிறைந்த கோயிலில் நீங்கள் இருக்க வேண்டாம்’’
பெரிதாகச் சிரித்தபடி மறைந்தாள் என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar