Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மீனாட்சி திருக்கல்யாணம்
 
பக்தி கதைகள்
மீனாட்சி திருக்கல்யாணம்


இப்படி நாடெல்லாம் மகிழ்ந்திருக்கும் வேளையில், மலையத்துவஜ பாண்டிய மன்னன், கடவுளின் ஆணைக்கு இணங்க, மகளுக்கு தடாதகை என்று பெயர் சூட்டி, சாதகர்மம் முதலிய சடங்குகளை முறைப்படி செய்து, வேதங்களால் கூட அறியமுடியாத தெய்வ  பிராட்டியாரை, தொட்டு வளர்த்து, உள்ளம் களிகூர, பார்வதியைப் பெற்ற  இமவான் போல மகிழ்ந்திருந்தான்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, தெருவில் மற்ற சிறுமிகளுடன், நான்முகன் படைத்த இந்த பிரம்மாண்ட உலகையே சிறு வீடாக எண்ணி  எளிதில் உருவாக்கும் சக்தி கொண்ட பிராட்டியார், மணலில் சிறுவீடு கட்டி, மண் சோறு விருந்து வைத்து தடாதகை, தாய் காஞ்சனமாலையை தன் விளையாட்டுக்களால் களிப்பூட்டினாள்.  பந்தாடினாள், அம்மானையாடினாள். அண்ட சராசராசரங்களையும் ஆட்டுவிக்கும் அன்னை, முத்துச் சரங்களால் கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்வித்தாள்.
இந்த விளையாட்டுகளால் பிராட்டியின் தோழிகளும் அன்னையும் மகிழலாம்.  ஆனால், தந்தையாகிய மலையத்துவஜனுக்கு இவை போதாது. புதல்வனைப் போல் வளர்ந்து, முடிசூட்டிக் கொண்டு அரியாசனத்தில் அமர்ந்து பாண்டி நாட்டை ஆள வேண்டிய தடாதகை அதற்கு தேவையான பயிற்சி பெற வேண்டும்.  அதை மனத்தில் கொண்டு, மலையத்துவஜன் தக்க ஆசிரியர்களை அமர்த்தி தடாதகைக்கு அறுபத்து நான்கு கலைகள், நான்மறைகள், யானை, குதிரை, தேர் இவைகளை திறமையாக செலுத்தும் முறைகள்,
விற்போர், வாட்போர், எதிரிகளுடன் போர் செய்யும் முறை, படைகளை செலுத்தும் முறை, அவைகளில் உள்ள நுணுக்கங்கள், நியாயம், சட்டம், தர்மம், ராஜநீதி அனைத்தையும் கற்றுத்தர ஏற்பாடுகள் செய்தான். தடாதகை அனைத்தையும் வெகு விரைவில், அவளுடைய ஆசிரியர்களே வியக்கும்படி கற்று தேர்ந்தாள். மகளின் திறமையை கண்டு, அசரீரி வாக்கு சொன்ன போது ஏற்பட்ட மகிழ்ச்சியையும் விஞ்சி, களிகொண்டான்.
நாட்கள் சென்றன.  மலையத்துவஜனின் உடல் தளர்ச்சி கண்டது. உடல்நலம் குறைந்தது. தன் காலம் நெருங்குவதை சூசகமாக உணர்ந்த மன்னன், மகளுக்கு சீக்கிரமே முடி சூட்டி, அரியணை அமர்ந்து ஆட்சி செய்வதை காண விரும்பினான். திறமை மிக்க தன்னுடைய மந்திரி சுமதியை அழைத்து, தன் எண்ணத்தைச் சொல்லி, உடனே புதல்வியின் பட்டாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யும்படி ஆணையிட்டான்.
அரசனின் எண்ணத்தை அறிந்த சுமதி, காலம் தாழ்த்தாமல் காரியத்தில் இறங்கினான். ஜோதிட வல்லுநர்களை கலந்து, முடி சூட்ட மங்கலமான ஒரு நன்னாளை முடிவு செய்தான்.  முடிசூடும் நாள் முடிவானதும், முறைப்படி அனைத்து திக்குகளிலுமுள்ள அரசர்களுக்கு அழைப்பு ஓலை விடுத்தான். நகரெங்கும் அலங்கரிக்க ஆணையிட்டான். முடிசூட்டு விழாவிற்கு வேண்டிய பொருள்களை மிக்க கவனமாக தேர்ந்தெடுத்து திரட்டி அரண்மனையில் கொண்டுவந்து குவித்தான்.   
மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, யானை மீது தங்கக் கலசங்களில் கொண்டு வந்த  ஒன்பது புனித நதிகளான கங்கை, யமுனை, வாணி, நர்மதை, காவிரி, குமரி, கோதாவரி, துங்கபத்திரை, தாமிரவருணி தீர்த்தங்களால் நீராட்டினார்கள். அப்போது வேதங்கள் ஒலிக்க, வேள்வித்தீ வளர்த்தனர்.   
பட்டத்து யானை மீது அழகிய மணிமுடியை வைத்து, நகர் வலம் செய்வித்து, பூசித்து, செம்பொன்னால்  செய்த ஐந்துதலை நாகம் மேலே கவிந்திருக்கும் ரத்தின சிம்மாசனத்தில் பிராட்டியாரை அமரச் செய்து புண்ணிய நீரினால் திருமஞ்சனம் செய்வித்து, தேவர்கள் மலர் மாரி பொழிய, தவ முனிவர்கள் ஆசி கூற, தேவமகளிர் நடனமாட, முனிபத்தினிகள் பல்லாண்டு பாட, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, வேதம் முழங்க, கருணையே வடிவான பிராட்டியாருக்கு மணிமகுடம் சூட்டினார்கள்.
பால் போன்ற வெண் கொற்றக்கொடை மேலே கவிந்திருக்க, வெண்கவரிகள் இரு பக்கமும் வீச, வேப்ப மலர் மாலையை அணிந்து, பெண்ணரசியாகிய தடாதகை வெள்ளை யானையின் மீதேறி, மங்கல ஒலிகளுடன், நகர் வலம் வந்தாள்.
செல்வப் புதல்வியின் ஆட்சி கண்டு மன்னன் உள்ளத்தில் உவகையோடு சில நாட்கள் செல்ல, தன் தோளில் வைத்திருந்த சுமையாகிய நிலவுலகத்தை மகளுக்கு ஈந்துவிட்ட மன நிறைவுடன் வானுலகத்தை அடைந்தான்.
தடாதகை தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் முறைப்படி செய்து முடித்து, சிம்மாசனத்தில் வீற்றிருந்து உலகம் அனைத்தையும் ஒரு குடைக்கீழ் ஆட்சி புரிந்தாள்.
ஒவ்வொரு நாளும் தோழிமார்கள் அதிகாலையில் இனிய வாத்தியங்களை லேசாக ஒலித்து, அரசியை துயிலெழச் செய்வார்கள். பிறகு தடாதகை வாசனை பொடிகள் கலந்த நன்னீரில் நீராடி, மரபு படி சிவபூசை செய்து, அமைச்சர்கள் புடைசூழ, சோமசுந்தரக் கடவுளின் கோயிலை அடைந்து, பெருமானை முறைப்படி வணங்கி, பின் தன் மாளிகையை அடைந்து, அரியாசனத்தில் வீற்றிருந்து, அனிந்திதை, கமலினி என்னும் தோழிப் பெண்கள் சாமரங்கள் வீச, முதல் மந்திரி சுமதியிடமும், மற்ற மந்திரிகளுடனும் கலந்து அன்றாடம் நெறிப்படி அலுவல்களை கவனித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தாள் பிராட்டியார்.
இவ்வாறு மனுநீதி வழியில், கன்னிப் பருவத்தில் உள்ள தடாதகை பிராட்டியார், ஆட்சி புரிந்து வருவதால், அந்த பாண்டி நாடு கன்னிநாடு எனப் பெயர் பெற்றது.  
தனங்களை தாங்க தடுமாறும் சிற்றிடையும், கங்குலையே வெண்ணிறம் என்று எண்ணும்படி செய்யும் கரிய கூந்தலும், யாழின் இசையைப் போன்ற மெல்லிய இனிமையான  சொல்லையும், முத்துப் புன்முறுவலோடு கூடிய பிராட்டியாருக்கு திருமணம் செய்யும் பருவம் வந்துற்றது.  (கங்குலையே வெண்ணிறம் செய்யும் கரிய கூந்தல் - பரஞ்சோதியாரின் அற்புதமான  உபமானம்). (கங்குல் = இருட்டு, இரவு)
தாய் காஞ்சனமாலைக்கு பருவமடைந்த மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற கவலை. மகள் நாள் முழுவதும் அரசியல் விவகாரங்களிலேயே ஈடுபட்டிருப்பதால், தாய்க்கு அவளிடம்  நிதானமாக பேசக்கூட நேரம் கிடைப்பதில்லை. எப்படியோ ஒருநாள், காஞ்சனமாலை மகள் தடாதகையிடம் பேச சந்தர்ப்பம் கிடைத்தது.  அப்பொழுது தாய் அவளிடம், ‘‘அம்மா குழந்தை! உனக்கு திருமணப்பருவம் வந்துவிட்டது, இன்னும் தக்க கணவன் அமையவில்லையே என்று கவலையாய் இருக்கிறது.  உனக்கு திருமணம் சீக்கிரமே நடக்க அந்த சோமசுந்தர பெருமாள் அருள் புரியவேண்டும்"
அதைக் கேட்ட தடாதகை பிராட்டியார், ‘‘அம்மா! நீ நினைத்தபடியே எனக்கு திருமணம் தக்க சமயத்தில் நடக்கும். கவலையை விடு.  நான் அனைத்து திசைகளும் படைகளுடன் சென்று என்னுடைய ஆட்சியை நிலை நாட்டப்போகிறேன். பிறகுதான் திருமணம்’’ என்று சொல்லிவிட்டு, தாயின் மறுமொழிக்கு கூட நிற்காமல் புறப்பட்டு விட்டாள்.
அவளுடைய விருப்பத்தை மந்திரிகளும் மற்றவர்களும் வரவேற்று அதற்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார்கள். ஒரு நல்ல நாளில், உலக மாதாவான பிராட்டியார், ஒரு அழகிய தேரில் ஏறி, உலகம் காக்கும் பொருட்டு, அனைத்து தேசங்களிலும் தன் ஆட்சி நிறுவ புறப்பட்டாள்.
பிராட்டியாரின் எண்ணத்தை அறிந்த மந்திரிகளும், மற்ற அரசர்களும்  ஒருங்கே குழுமி தங்கள் முழு ஆதரவை தெரிவித்து, பிராட்டியாருடன் தாங்களும் தங்கள் படைகளுடன் சேர்ந்து கொண்டார்கள்.  தடாதகை பிராட்டியார் கையில் வஜ்ஜிராயுதத்துடன் ஒரு அழகிய தேரில் ஏறினார். அவருடன் நால்வகை சேனைகளும் அணிவகுத்து சென்றன.  
வில்லில் பூட்டிய அம்புகளுடன், கைகளில் வாளும் கேடயமும் ஏந்தி மகளிர் கூட்டமும் பிராட்டியாரின் தேரிலே ஏறினர்.  
பேரிகைகள், முருடுகள், உடுக்கைகள், பம்பை, தாரை ஆகிய வாத்தியங்கள் திசையெங்கும் ஒலிக்க, எட்டு திக்குகளையும் தகர்க்கும் வன்மையுடன், இடது சாரி வலது சாரியாக சுழலும் தேர்கள் உடன் சென்றன.  பருத்த தலையும், பெரிய துதிக்கையும், மதநீர் பொழிய, குருதி தோய்ந்த கொம்புகளுடன், பெரிய தண்டினை ஏந்திச் செல்லும் கொடிய கூற்றுவனைப் போலவும், குன்றுகள் நகர்வது போல யானைப்படை சென்றது.  
மாபெரும் வெள்ளம் போல குதிரைப்படையும் விரைவாக சென்று கொண்டிருந்தது.  
காலில் வீர தண்டை அணிந்து, கூற்றுவனையே புறம் கண்டு வரும் தன்மை உடைய, நஞ்சு பூசிய வேல்களை கையில் ஏந்தி காலாட்படை வீரர்கள், விரைந்து சென்றனர்.  
இப்படி ஆர்ப்பாட்டத்துடனும் ஆரவாரத்துடனும் செல்லும் இந்த மாபெரும் சேனையால் எழுகின்ற புழுதி கதிரவனையே மறைத்து இருள் சூழ்ந்தது.  ஆனால், உடன் வந்த அரசர்களின் முத்து குடைகளும், வைரத்தால் செய்த வாட் படைகளும், அந்த இருளை போக்கி ஒளி தந்தன. படைத்தளபதிகள், தேவியின் திருவுள்ளக் குறிப்பை உணர்ந்து தங்கள் படைகளை நடத்திச் சென்றனர்.  
முதலில் அவர்கள் வட நாட்டு மன்னர்கள் பலரை வென்று, அவர்களை அடிபணிய வைத்து, அவர்களின் படைகள், பொருட்கள், அனைத்தையும் திறையாகப் பெற்றார் தேவி.  
அப்படியே நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று எங்கும் வெற்றிக்கொடி நாட்டி, தன் கவனத்தை தேவலோகத்தின் பக்கம் திருப்பினார் சக்தி வடிவமாக நின்ற தடாதகை. 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar