Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மீனாட்சி திருக்கல்யாணம்
 
பக்தி கதைகள்
மீனாட்சி திருக்கல்யாணம்


தேவியின் படைகள் தன் பக்கம் வருவதை தெரிந்து கொண்ட தேவேந்திரன், எங்கோ கண் காணாமல் ஓடிவிட்டான்.  எளிதாக தேவலோகத்தை கைப்பற்றினாள் அன்னை தடாதகை. தேவேந்திரனுக்கே உரிய ஐராவதம், உச்சை ஸ்ரவஸ் என்ற குதிரை, காமதேனு, கற்பக மரம், அங்கு குவிந்து கிடந்த தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் அனைத்தையும் பாண்டி நாட்டு அனுப்பி வைத்தாள். அங்கிருந்த அக்னி, வருணன், வாயு, குபேரன், யமன் ஆகிய  திசைக்காவலர்கள்  அனைவரும் தேவியின் முன் சரணடைந்தனர்.   
வெற்றி முழக்கத்துடன், வீராவேசத்துடன் அன்னையின் படையினர் கைலாயத்தை அடைந்து முற்றுகை இட்டனர்.  இதைக் கண்டு அங்கிருந்த காவலர்கள் ஓடோடிச் சென்று தங்கள் தலைவனான நந்திகேஸ்வரரிடம் முறையிட்டனர்.  
நந்திகேஸ்வரர் கைலாயத்தை காத்து வந்த பூதகணங்களை ஏவினார்.  கடும் போர் நடந்தது. பூதகணங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்கினர்.  ஆற்றல் அழிந்து சோர்வாக திரும்பிய பூத படையைக் கண்டு, செய்வதறியாது சிவபெருமானிடம் நடந்ததை கூறினார்.  
சிவபெருமான் இதைக் கேட்டு, எந்தவித அதிர்ச்சியும் அடையாமல் புன்முறுவலுடன் தன்னுடைய ரிஷப வாகனத்தில் ஏறி போர்க்களம் சென்றார்.  பெண் சிங்கமாக சிலிர்த்து, எதிர்த்து வந்த மாபெரும் படைகளையெல்லாம் கோபத்துடனும் வீரத்துடனும் தன் வஜ்ராயுதத்தினால் துவம்சம் செய்து, துாள் துாளாக்கி,  வெற்றி கண்ட பார்வதியாகிய தடாதகை அன்னை, வீர கண்டை அணிந்த திருவடியையும், பாம்பாகிய கச்சையினால்  கட்டப்பட்டுள்ள புலித்தோல் ஆடையும், மழுவேந்திய திருக்கரமும், திருநீறு தரித்த நெற்றியும், முப்புரி அணிந்த திருமார்பும், திரண்ட சடையும், தன்னை பார்க்கின்ற கருணை நிறைந்த கண்களையும், உடைய தன்னுடைய வலப்பாதியாகிய சிவபெருமானைக் கண்ட மாத்திரத்தில், அவளின் மூன்றாவது தனம் மறைந்தது.  அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, என்னும் பெண்மைக்குரிய குணங்கள் வெளிப்பட, உடல் வளைந்து துவள, குழற் கற்றை பிடரியில் சரிய, தலை தாழ்ந்து, மையுண்ட கண்கள் தரை நோக்க, கட்டை விரலால் மண்ணைக் கீறிக்கொண்டு நின்றாள்.
இதைக் கண்ட ஆற்றலும் அறிவும் மிக்க அமைச்சர் சுமதி முன்னாளில் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து, சிவபெருமானையும்,  தடாதகையையும், வீழ்ந்து வணங்கி, "தாயே! கொன்றை மாலை அணிந்து இங்கே எழுந்தருளியுள்ள சர்வேஸ்வரனாகிய சிவபெருமானே தங்கள் மணவாளன் என்று கூறினான்.  
அப்பொழுது சிவபெருமான் அன்னையை நோக்கி,‘‘நீ என்று  எண்திசையும் சென்று வெற்றி பெற உன் படையுடன் புறப்பட்டாயோ,  அன்று முதல் நானும் நம் மதுரையை விட்டு உன்னையே பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தேன்.  வரும் சோமவாரம் (திங்கட்கிழமை) நல்ல சிறந்த முகூர்த்த நாள்.  அன்று நாம் உன்னை திருமணம் செய்ய வருவோம்.  நீ இப்பொழுது மதுரைக்கு திரும்பிச் செல்’’ என்று கூறி தடாதகை பிராட்டியாரை அனுப்பி வைத்தார்.  
இதைக் கேட்டதும் பிராட்டியார், தன்னுடைய உயிரையும், அன்பையும் கைலாயத்திலேயே விட்டுவிட்டு, மகளிர் கூட்டம் சூழ, மலையினை ஒத்த தன்னுடைய தேரின் மீது ஏறி, மலைகளையும், புண்ணிய நதிகளையும் கடந்து மணம் மிக்க பெருமையுடைய மதுராபுரி  வந்து சேர்ந்தாள்.  
மங்கையற்கரசியாகிய பிராட்டியார், மங்கலப்பொருட்கள் ஏந்திய பெண்கள் எதிர் கொண்டு அழைக்க,  செல்வம் பொங்கும் தன் மாளிகைக்குள் நுழைந்தாள்.  
மாளிகை வந்தடைந்ததும், தடாதகை முதலில் தாய் காஞ்சனமாலையை கண்டு, சேவித்தாள்.  சிவபெருமானை சந்தித்தையும், அவரைக் கண்டவுடன் தன் மூன்றாவது தனம் மறைந்ததையும், திங்கட்கிழமை திருமண நாள் என்று அவர் முடிவு செய்திருப்பதையும் சொன்னாள்.  இதை கேட்ட காஞ்சனமாலை அளவில்லா மகிழ்ச்சி அடைந்து மகளை ஆசீர்வதித்தாள்.  
தாமதம் செய்யாமல் மந்திரி சுமதி, திருமண ஏற்பாடுகளை கவனிக்க தொடங்கிவிட்டார்.  அனைத்து அரசர்களுக்கும் மணவோலை அனுப்பினார். நல்ல ஆடை ஆபரணங்கள் அணிந்த இளைஞர்களும் பெண்களும், சுமதியின் ஆணைப்படி, யானை மீது அமர்ந்து மதுரை நகரெங்கும் அரசி தேவி தடாதகை திருமணம் பற்றி முரசறிவித்தார்கள்.  திருமண அறிவிப்பை கேட்ட மதுரை மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே திருமணம்  நடக்கப்போகிற மன நிலையை அடைந்தார்கள்.  ஊரே விழாக்கோலம் பூண்டது.  பெண்கள் தங்களை சிறப்பாக அலங்காரம் செய்து கொண்டனர்.  பழைய நகைகளை எறிந்துவிட்டு, புதிய அணிகளை அணிந்து கொண்டார்கள்.  வசிக்கும் இல்லங்களுக்கு வெள்ளை அடித்து அழகு செய்தார்கள்.  தெருவெங்கும் கம்பங்கள் நிறுத்தி கொடிகளை ஏற்றினார்கள்.  
தெருவெங்கும் பந்தல் போட்டு வண்ணத் தோரணங்கள், ரத்தின மாலைகளையும், முத்து மாலைகளையும்  கட்டி அழகுபடுத்தினர்.  பழுத்த குலையுடைய வாழை மரங்களையும், கருப்பங்கழிகளையும் பந்தலில் கட்டினர்.  பாவை விளக்குகளை நிறுத்தினர்.  
மகளிர், பிராட்டியாருக்கு திருமணம் நடக்க இருக்கும் மகிழ்ச்சியில், இசைப்பாட்டினை யாழோடு சேர்த்து பாடினர்.
ஒவ்வொரு வீட்டிலும் அறுசுவை உணவு சமைத்து, திருமணம் காண வரும் அனைவரையும்  இனிய முகத்துடன் வரவேற்று அமுது படைத்தனர். சுமதியின் ஏற்பாட்டில் திருமண மண்டபம் அழகுற அமைக்கப்பட்டது. பளிங்கினால் செய்யப்பட்ட யானைகள் மண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் நின்றன.  மண்டபத்துக்கு மாணிக்கத்தால் அழகு செய்யப்பட்ட பொன்னாலான படிகள் மண்டபத்துக்குள் செல்ல அமைக்கப்பட்டன. பவளத்தால் ஆன தூண்கள் ஆயிரம் நின்றன. பொன்னால் செய்த உத்தரங்கள் அமைக்கப்பட்டன.  தேவலோகத்திலிருந்து பெற்ற கற்பகத்தரு கொடுத்த வைரத்தால் ஆன சிம்மாசனத்தில், பொற்பலகை அமைத்து அதன் மீது பவளத்தால்  நான்கு புறம் துாண்கள் நாட்டி, சிற்ப சாஸ்திர விதிப்படி பலவகை மணிகளால் அலங்கரித்து அழகுபெற அமைத்தனர்.  மணமக்கள் அமர நவமணிகள் இழைத்த பொன்னிருக்கை ஒன்றையும் அமைத்தனர்.
தேவலோகத்திலிருந்து கொண்டு வந்த கற்பகத்தரு ஆடை ஆபரணங்கள், அணிகலன்கள் முதலியவைகளை தங்கு தடையில்லாமல் அனைவருக்கும் வழங்கிக்கொண்டே இருந்தது. காமதேனு, அறுசுவை உணவு வகைகளை உண்டாக்கி விருந்தினர்களுக்கு அமுது படைத்தது.  அன்று மதுரை இருந்த அழகையும், சிறப்பையும், கோலாகலத்தையும் கண்டு தேவேந்திரனின் அமராவதி நகரமே நாணியது.
நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்து அரசர்கள் திறைப் பொருட்களோடு தேவி தடாதகை பிராட்டியாரின் திருமணத்தை காண வந்தனர்.
ஆதி அந்தம் இல்லாத நாயகன் சிவபெருமான், தான் சொல்லியிருந்தபடி தேவி தடாதகையை திருமணம் செய்ய கைலாயத்திலிருந்து மதுரை மாநகர் நோக்கி புறப்பட தயாரானார்.  
ஈசனின் திருவுளக் குறிப்பை அறிந்து, அழகாபுரி அரசன் குபேரன், தான் முன்பு செய்த தவத்தின் பயன் வந்து கைகூட, மண்டபத்திற்கு சென்று, திருமால், பிரமன், இருவரும் மற்ற மாபெரும் தவ முனிவர்களும் தீண்ட அஞ்சும் சர்வேஸ்வரனின் திரு மேனியை தன் கையால் தொட்டு திருமணக் கோலம் செய்யத் தொடங்கினான்.  
அழகிய பட்டாடைகளை அணிவித்து, உடலெங்கும் சந்தனம் பூசி, காதுகளில் பொற் குண்டலங்கள் அணிவித்து, தோள்களில் வயிரக்கண்டிகை சாத்தி, முப்புரி அணிந்த மார்பில் தலை முடியின் மீது உள்ள சந்திரனிலிருந்து விழும் அமுதத்தை போல முத்து மாலை சாற்றி, அதன் மீது மேலும் மாணிக்கத்தால் ஆன மாலையை அணிவித்து இப்படி பலவாறாக அழகு செய்து, குபேரன் தான் செய்த தவத்தின் பயனைப் பெற்றான்.
திருமணக் கோலம் கொண்ட சிவபெருமான், ரிஷப வாகனத்தின் மீது எழுந்தருளினார்.  பிறகு மதுரையம்பதிக்கு அனைவரும் கிளம்பினர்.  ஊர் எல்லையை அடைந்ததும், தடாதகை பிராட்டியாரின் அமைச்சர் சுமதி மற்றும் முக்கிய மந்திரிகளும், பல தேசத்து அரசர்களும், எதிர் கொண்டு அழைத்து பெருமானை தரிசித்து, மகிழ்ச்சியுடன் மண்டபத்தினுள்ளே அழைத்து சென்றனர்.  
பின்னர் காஞ்சனமாலை அங்கே வந்து பெருமானை வணங்கி, ‘‘சர்வேஸ்வரா! என் மகள் தடாதகையை ஏற்று திருமணம் செய்து கொண்டு, இந்த நாட்டின் ஆட்சியையும் கைக்கொண்டு அரசு செய்து அருள் புரியவேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டார்.  
பெருமான் திருவுள்ளம் இசைந்து, ‘அப்படியே ஆகட்டும்’ என்று கூறி நான்கு வேதங்களும் முழங்க சிம்மாசனத்தில் வீற்றிந்தார்.  தேவர்களும், மற்ற இரு மூர்த்திகளும் சிவபெருமானின் அருகில் அமர்ந்திருந்தனர். தேவ மாதர்கள் ஆடல் புரிந்தார்கள்.  
அங்கே கைலாயத்தில் குபேரன் திருமண நாயகன் சிவபெருமானுக்கு அலங்காரங்கள் செய்தான் என்றால், இங்கே மதுராபுரியில் திருமகளும், கலைமகளும் பிராட்டிக்கு அலங்காரம் செய்வித்தனர்.
முகூர்த்த நேரம் நெருங்கியது. கலைமகளும், திருமகளும் கைலாகு கொடுத்து மணப்பெண் தேவி தடாதகையை வேத கோஷங்கள் ஒலிக்க, மணமேடைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே ஏற்கனவே எழுந்தருளியிருந்த சிவபெருமானின் பக்கத்தில் பார்வதியாகிய பிராட்டியார் அமர்ந்தார்.  பார்வதி தேவியரின் அலங்காரத்தைப் பார்த்து பரமசிவன் ஆச்சரியமும், ஆனந்தமும் கொண்டார்.  
திருமண வைபவம் தொடங்கியது. தடாதகைக்கு தமையனான திருமால் பொற்கலசத்தில் இருந்த கங்கை நீரால், மணமகன் சிவபெருமானின் திருவடிகளை அலம்பினார்.  பிறகு சிவந்த சிவபெருமானின் வலக்கரத்தில் பிராட்டியாரின் திருக்கரத்தை வைத்து வேத மந்திரம் சொல்லி தாரை வார்த்து கொடுத்தார்.  இனிய சங்கீதம் முழங்கியது, அரம்பையர் ஆடினர், முனிவர்கள் ஆசி கூறினர்.  வானத்திலிருந்து பூமாரி பொழிந்தது.
திருமண சடங்குகளை  வேத முறைப்படி பிரம்மதேவன் செய்தார்.  சிவபெருமான், மங்கல நாணை தேவி பிராட்டியாருக்கு பூட்டினார்.  மக்கள் மனத்தில் மகிழ்ச்சி பெருக்கெடுத்தது.  அனைத்து ஜீவராசிகளும் மகிழ்வுற்று பேரின்பம் அடைந்தன.  மணக்கோலத்தில் காட்சி தந்த பரமசிவன் பார்வதியை பார்த்தவர்கள் என்ன புண்ணியம் செய்தார்களோ!  உலகையே காக்கும் சிவபெருமானையும் அவருடன் லோகமாதாவான பரமேஸ்வரியையும் அனைவரும் விழுந்து வணங்கினர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar