Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » இரு பயணங்கள்
 
பக்தி கதைகள்
இரு பயணங்கள்


என்முன் உருவெளிப்பாடாகத் தோன்றிய உமையவளிடம் கேட்டேன்.
“ஒரு முழுமையான ஆன்மிகப் பயணத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்”
“ஒன்றென்ன இரண்டைப் பற்றிச் சொல்கிறேன்.”
சேதுவும் வாசுவும் நண்பர்கள். ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். . சேது வஞ்சனையின்றி உழைத்தான். வாசுவுக்குப் பொறுமை இல்லை.
“ஒண்ணும் தெரியாத மேனேஜர் ரெண்டு லட்சம் சம்பாதிக்கறான். நாம நாற்பதாயிரம் ரூபாய்க்கு நாய் படாத பாடு பட வேண்டியிருக்கு.”
சேது ஒன்றும் பேசவில்லை.  
வாசு திட்டமிட்டான். ஒரு சூழ்ச்சியில் மேனேஜரை சிக்க வைத்து அவர் பதவியைப் பறித்தான்.
சேதுவிற்கு வாசுவின் போக்குப் பிடிக்கவில்லை என்பதால் வாசுவிடமிருந்து விலகிவிட்டான்.
வாசு அசுர வேகத்தில் முன்னேறினான். சேதுவைவிட நான்கைந்து மடங்கு சம்பளம்.  பெரிய பதவி. கூடவே மது, மாது போன்ற பழக்கங்கள்.
இருவருக்கும் திருமண வயதானது. ஒரு கோடீஸ்வரர் வாசுவிற்கு மகளைத் தர முன்வந்தார்.
சேது சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண்ணைத் திருமணம் செய்தான்.
வாசு, சேதுவிற்கு நாற்பது வயதானபோது வாசு அந்த நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தான். சேது உதவி மேலாளராக இருந்தான்.
பென்ஸ் கார், பெரிய பங்களா,, வெளிநாட்டுப் பயணம் என்றிருந்தது வாசுவின் வாழ்க்கை. சேதுவோ அப்போதுதான் இரு சக்கர வாகனத்திலிருந்து சிறிய கார் வாங்கியிருந்தான். கடன் வாங்கி ஒரு பிளாட்டை வாங்கியிருந்தான்.
நிறுவனத்தின் தலைவர் பதவி காலியானபோது வாசு சூழ்ச்சியால் தலைவராகிவிட்டான். தலைவரான மகிழ்ச்சியை வாசுவால் கொண்டாட முடியவில்லை. வாசுவின் பையன் மதுவருந்தி காரை ஓட்டி விபத்தில் சிக்கிக் கொண்டான். வாசுவின் செல்வத்தாலும் செல்வாக்காலும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டான்.
வாசுவின் மனைவிக்கு மனநோய் வந்துவிட்டது.
சேது தன் போக்கில் நிம்மதியாக வாழ்ந்து வந்தான்
கல்லுாரிச் சுற்றுலாவிற்குச் சென்ற வாசுவின் மகள் தான் கர்ப்பமாகிவிட்டதாகச் சொன்னாள். பணத்தைத் தண்ணீராகச் செலவழித்து வரவிருந்த பழியிலிருந்து மீட்டு மகளுக்குத் திருமணம் செய்துவைத்தான் வாசு.
போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் வாசுவின் மகன் கைதானான். நிறுவனத்தின் பணத்தை வாசு கையாடல் செய்துவிட்டதைத் தணிக்கையாளர்கள் கண்டுபிடித்தனர். வழக்கு ஐந்து வருடங்கள் நடந்தது. வாசுவிற்குச் சிறை தண்டனை கிடைத்தது. மேல் முறையீடு செய்து தன் செல்வாக்கை பயன்படுத்தி வெளியே வந்தான் வாசு.
சேதுவின் வாழ்க்கையோ தெளிந்த நீரோடையாக சென்றது. அவனது மகன் பட்டப்படிப்பு முடித்தவுடன் ஓவியக்கலை பயின்று பெயரும் புகழும் சம்பாதித்தான். ஒரு வட இந்தியப் பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தான். சேதுவின் மகள் தமிழில்  முனைவர் பட்டம் பெற்று வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் தமிழைப் போதித்துக் கொண்டிருந்தாள். அங்கேயே ஒருவனை காதல் திருமணம் செய்து  மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்.
சேதுவிற்கு இப்போது இரண்டு பேரன்கள். இரண்டு பேத்திகள். ஆறுமாதம் மகனுடனும் ஆறு மாதம் மகளுடனும் நிறைவாக வாழ்ந்து கொண்டிருந்தான்.  
வாசுவின் மனைவி படுத்த படுக்கையானாள். வாசுவிற்கு நிம்மதி என்றால் என்னவென்று தெரியாமல் போனது.
வாசு, சேது இருவருக்கும் 70 வயதான போது இறந்து போனார்கள். அவர்களின் ஆன்மாக்கள் பச்சைப்புடவைக்காரியின் சன்னதியில் இருந்தன.
“ஏன் இந்த ஓரவஞ்சனை, தாயே? சேதுவிற்கு மட்டும் நிறைவான வாழ்க்கையைக் கொடுத்தீர்கள். எனக்கு வலியும் வேதனையும் நிறைந்த வாழ்க்கையைக் கொடுத்தீர்கள். நான் என்ன பாவம் செய்தேன்?”
“உன் வாழ்க்கையை நீதானே தேர்ந்தெடுத்தாய்?.”
“எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பங்கள்?
“சில இடங்களில் இருபதடி தோண்டினாலே தண்ணீர் பிரவாகமாக வந்துவிடும். அப்படிப்பட்ட மனம் சேதுவிடம் இருந்தது. சில இடங்களில் ஐநுாறு, அறுநுாறு அடி தோண்டினால்தான் கொஞ்சமாவது தண்ணீர் வரும். உன்மனம் அந்த ரகம்.”
“எப்படிச் சொல்கிறீர்கள் தாயே”
“குறுக்கு வழியில் முன்னேறலாம் என நினைத்தது, சூழ்ச்சியின் மூலம் அடுத்தவனைக் கெடுத்து நீ வாழ நினைத்தது எல்லாம் அன்பின்மையின் வெளிப்பாடுகள். அதனால் உன் மனதின் ஆழத்தில் இருந்த அன்பைக் வெளிக் கொணர நிறைய துன்பங்களைக் கொடுத்தேன். துன்பம் இல்லாமலேயே சேதுவின் அன்பு வெளிப்பட்டுவிட்டது. பத்தடி துாரத்தில் தண்ணீர் கிடைத்தபின் மேலும் ஏன் தோண்ட வேண்டும்?”
“செய்த பாவங்களுக்கு நான் தண்டனை அனுபவித்துவிட்டேன். சேது செய்த நன்மைகளுக்கு அவன் நல்ல வாழ்க்கை வாழ்ந்துவிட்டான். இப்போது எங்கள் இருவரின் வாழ்க்கையுமே முடிந்துவிட்டதே! இப்போது எங்களுக்குள் என்ன வித்தியாசம், தாயே?”
பராசக்தி சிரித்தாள்.
“ஒருவன் மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலில் போக வேண்டும் என தீர்மானிக்கிறான். ஒரே ஒரு ரயில்தான் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதில் பலதரப்பட்ட பெட்டிகள் இருக்கும் அல்லவா?
“முதல் வகுப்பு ஏசியில் பயணித்தால் சுகமாக இருக்கும். நன்றாகத் துாங்கலாம். பயணக்களைப்பே தெரியாது. இரண்டாவது வகுப்பு ஏசியில் அந்தளவுக்கு சுகம் இருக்காது என்றாலும் அந்தப் பயணமும் வசதியாகத்தான் இருக்கும்.
சாதாரண படுக்கை வசதி உள்ள பெட்டியில் வசதி இன்னும் குறைவாக இருக்கும்.
“பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்வது சித்ரவதையாக இருக்கும். கூட்டம் அதிகமாக இருக்கும். அங்கே இங்கே நகர முடியாது. உட்கார்ந்து கொண்டே வர வேண்டும். துாக்கம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
“அதுபோல்தான் ஆன்மிகப்  பயணமும். அதற்கு நீ கொடுக்கவேண்டிய கட்டணம் அன்பு. நீ குறைவாகவே கட்டணம் செலுத்தினாய். பதிவு செய்யப்படாத பெட்டியில் இடிபாடுகளுக்கும் இன்னல்களுக்கும் இடையே பயணித்தாய். சேது அன்பை வாரி வழங்கினான். ஏசி முதல் வகுப்பில் பயணித்தான். பயணம் சுகமாக இருந்தது அவனுக்கு.”
அப்படியும் வாசு விடவில்லை.
“எந்தப் பெட்டியில் பயணித்தாலும் சென்னையை அடைந்தபின் எந்த வித்தியாசமும் கிடையாதே. முதல் வகுப்புப் பெட்டியும் இரண்டாம் வகுப்புப் பெட்டியும் ஒரே சமயத்தில்தானே சென்னை போய்ச் சேரும்?”
“சென்னையோடு உங்கள் பயணம் முடிந்துவிடாதே!  இன்னும் நீங்கள் பயணிக்க வேண்டிய துாரம் நிறைய இருக்கிறது. சென்னைவரை சுகமாகப் பயணித்த சேது அடுத்த கட்ட பயணத்துக்குத் தயாராக இருக்கிறான். அதற்கு இன்னும் அதிகமான அன்பைக் கொடுக்கவும் சித்தமாக இருக்கிறான். அதனால் அவன் விமானப் பயணமே செய்தாலும் செய்யலாம். என்னை விரைவில் வந்தடைந்து விடுவான்.
“சென்னை வரை பயணத்திலேயே துவண்டுவிட்ட நீ அடுத்த கட்ட பயணத்தைத் தொடங்கவே நாளாகுமே. அவ்வளவு களைப்பில் இருக்கிறாய்’’
வாசு அன்னையின் கால்களில் விழுந்து வணங்கினான்.
“எனக்கு ஏதாவது நல்ல வார்த்தை சொல்லி என் பயணத்தையும் சுகமாக்கக்கூடாதா?”
“அன்பை வாரி வழங்க தயாராக இரு. அடுத்த கட்ட பயணம் சுகமாக இருக்கும். என் ராஜ்ஜியத்தில் அன்பு ஒன்றே செலாவணியாகும் பணம். பதவி, செல்வம், புகழ் எதுவும் என்னிடம் எடுபடாது. இதைப் புரிந்துகொண்டால் உன் பயணம் இனிக்கத் தொடங்கும்”.
அன்னையை வணங்கினேன்.
“என்ன உனக்கும் சேதுவைப் போக சுகமாக ஆன்மிகப் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதா?”
“இல்லை, தாயே! இன்னும் எத்தனையோ பேர் வாசுவைப் போல் தவறான பயண வழியைத் தேர்ந்தெடுத்து மரண வேதனையை அனுபவிக்கிறார்கள். நிலைமையை விளக்கி அவர்கள் பயணத்தை இனிமையாக்க வேண்டும்.”
“உன் பயணத்தைப் பற்றி?”
“கொத்தடிமைக்கு ஏது தாயே பயணமும் பரங்கிக்காயும்? காலமெல்லாம் உங்கள் காலடியில் கிடக்கும் நான் எதற்காக, எங்கே, எதை நோக்கிப் பயணிக்க வேண்டும்?”


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar