Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நடிகையின் தவம்
 
பக்தி கதைகள்
நடிகையின் தவம்


மீனாட்சி கோவிலில் சிறப்புத் தரிசன வரிசையில் நின்றுகொண்டிருந்தேன்.  திடீரென பின்னால் இருந்து ஒரு பெண் என்னை இடித்துத் தள்ளிவிட்டு முன்னேறினாள்.
“வரிசையில இத்தனை மணி நேரம் கால் கடுக்க நிக்கறவங்க முட்டாளா? இடிச்சு தள்ளிட்டுப் போற? சோறுதானே திங்கற? சூடு சுரணையில்லையா?”
அந்தப் பெண் என் கத்தலைக் கண்டுகொள்ளவில்லை. பின்னால் நின்றிருந்த மற்றொரு பெண் என் முதுகில் அடித்தாள்.
“என் சன்னதியில் பேசும் பேச்சா இது?”
பச்சைப்புடவைக்காரியை வணங்கினேன்.
“அவள் தவறு செய்துவிட்டாள் தாயே”
“அவள் மட்டுமா? முன்னால் பார். ஒரு அரசியல் கரை வேட்டி குடும்பத்துடன் உள்ளே நின்று கொண்டிருக்கிறது. இந்தப் பெண்ணைத் திட்டியதுபோல் அவனைத் திட்டினால் உன்னைத் தொலைத்து விடுவான்”
தலைகுனிந்தேன்.
“அடுத்து நீ செய்யப் போகும் வேலையில் அன்பு மட்டும்தான் இருக்கவேண்டும். யாரையும் எடை போடக்கூடாது. வெறுக்கக்கூடாது.”
அன்னை மறைந்துவிட்டாள்.
அடுத்த வாரம் சென்னையில் இருந்த போது ஒரு பிரபல நடிகையை நான் சந்தித்தே ஆக வேண்டும் எனச் சொன்னார்கள்.
நீலாங்கரையில் இருந்த அந்த பெரிய மாளிகைக்குள் நுழைந்தபோது மனம் ஒருநிலையில் இல்லை.
தாழ்வாரத்தில் கூட்டிக் கொண்டிருந்தவள் என்னை நோக்கி ஓடி வந்தாள்
“யாரிடமும் சொல்லாததை அந்த நடிகை உன்னிடம் சொல்வாள். அதற்காக அவளை வெறுக்காதே. அதே சமயம் விழிப்புணர்வுடன் இரு. கொஞ்சம் அசந்தாலும் சேற்றில் மாட்டிக்கொள்வாய்”
பச்சைப்புடவைக்காரியை வணங்கினேன்.
“மிக முக்கிய விஷயம். அவள் என்னை மறுத்துப் பேசினாலும், திட்டினாலும் நான் உனக்குக் கொடுக்கும் வார்த்தைகளை நீ சொல்ல வேண்டும்”
எப்பேர்ப்பட்ட அன்பு இது! வியந்து வணங்கினேன்.
உள்ளிருந்து வந்த இன்னொரு பெண் என்னை மாடியறைக்கு அழைத்துச் சென்றாள். கதவைத் திறந்ததும் கூப்பிய கைகளுடன் நின்றிருந்த  நடிகையைப் பார்த்தேன்.
“நான் சவுமியா. அதுதான் நிஜப்பேரு. சினிமாவுல வேற பேரு”
“உங்க பிரச்னை”
“அளவுக்கதிகமான காமம்”
திடுக்கிட்டேன்.
“திரையுலகத்துல இருக்கற ஒரு முன்னணி நடிகருக்கு தினமும் புதுசா ஒரு பொண்ணு வேணும். நானும் அதே ரகம்தான். எனக்கு தினமும் அதுவரை சந்திக்காத ஒரு ஆண் துணை வேணும். பதினஞ்சு வருஷமா அப்படியே பழகிட்டேன்”
முகம் சுளித்தேன்.
“நான் ஒழுக்கம் கெட்டவ, பஜாரின்னு முடிவுக்கு வந்தீங்கன்னா நீங்க கிளம்பலாம். உங்களால எனக்கு உதவி செய்ய முடியாது”
“மன்னிச்சிருங்க.”
“இன்னொரு விஷயம். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. கோயிலுக்குப் போனதில்ல. பச்சைப்புடவைக்காரியச் சுத்தி வா. சிகப்புப் புடவைக்காரிக்குப் படையல் வைன்னு அறிவுரை சொல்றதா இருந்தா உடனே கிளம்பிருங்க”
தன்னை நம்பாதவளையும் பச்சைப்புடவைக்காரி நம்புகிறாளே! அந்த அன்பரசியையா இவள் நம்ப மறுகிறாள்?
“நான் என்ன செய்யமுடியும்னு நெனக்கிறீங்க?”
“இந்த வாழ்வே அலுத்துப் போச்சு. அதே சமயத்துல ஆண்துணை இல்லாம வாழ முடியல. அது இருந்தாலும் ருசிக்கல. இல்லாட்டியும் கஷ்டமா இருக்கு.  குடிப்பழக்கத்த விடமுடியாம, குடியில சுகமும் கிடைக்காம குடிச்சிக் குடிச்சித் தன்னையே அழிச்சிக்கிறவனோடநிலையில இருக்கேன். நீங்கதான் வழிகாட்டணும்’’
பச்சைப்புடவைக்காரியைப் பிரார்த்தித்தேன்.
“நான் காட்ற வழியில உங்களால நடக்கமுடியுமான்னு தெரியல’’
“மாடிலருந்து குதிச்சு சாகறதுதான் வழின்னு சொன்னீங்கன்னா அதையும் செய்யத் தயாரா இருக்கேன்”
“சாக வேண்டாம். ஆனா சாவோட வாழணும். தினம் தினம் சாவப் பாக்கணும். செத்துக்கிட்டிருக்கறவங்களப் பாக்கணும்”
“புரியலையே”
“எனக்கு தெரிஞ்ச டாக்டர் சென்னையில ஒரு ஹாஸ்பிடல் நடத்தறாரு. சாவோட விளிம்புல இருக்கற அம்பது பேர் உள் நோயாளிகளா இருக்காங்க. எய்ட்ஸ், புற்று நோயாளிகள், குணப்படுத்தவே முடியாத நோயுள்ளவங்க மட்டும்தான் இருக்காங்க. ஆறு மாசத்துல செத்திருவாங்கங்கற நிலையில இருக்கறவங்களுக்குத்தான் அனுமதி உண்டு”
“அங்க நான் என்ன செய்ய முடியும்?”
“உங்கள ஒரு சமூக சேவகியா அறிமுகப்படுத்தச் சொல்றேன். அங்கேயே தங்குங்க. தினமும் அந்த நோயாளிங்ககூடப் பேசுங்க. மரணம் வரும் போது அவங்க கையப் பிடிச்சிட்டுப் பக்கத்துல உக்காருங்க. அன்பின் ராஜ்ஜியத்துல மரணம்ங்கற பேச்சுக்கே இடமில்லைன்னு எடுத்துச் சொல்லுங்க. அடுத்த பிறப்பு நல்லா இருக்கும்னு நம்பிக்கை கொடுங்க”
“நான் ஒரு நடிகைன்னு கண்டுபிடிச்சிட்டா வில்லங்கமாப் போயிருமே?”
“உங்க தோற்றத்த மாத்திக்கலாம். ஒரு படத்துல கிராமத்துப் பொண்ணா நடிச்சது ஞாபகமிருக்கா? மேக்கப் இன்றி தலைமுடிய கிராமத்துப் பாணில இறுக்கி முடிஞ்சிக்கிட்டு... உங்கள யாராலும் அடையாளம் கண்டு முடிக்க முடியல. அந்த மாதிரி ஏதாவது செய்யுங்க”
“அங்க தனியா இருக்கும் போது பழைய நினைவுகள் வந்து ஏதாவது தப்பு செஞ்சிட்டா...’’
“அதுக்கு வாய்ப்பேயில்ல. எப்பவும் உங்ககூட ஒரு பெண் இருப்பா. மரணத்த ரொம்ப பக்கத்துல இருந்து பாத்துக்கிட்டேயிருக்கப் போறீங்க. அந்த சூழ்நிலயில உங்க மனசுல மோகம் வர வாய்ப்பேயில்ல. அங்க இருக்கும் போது நேரத்துக்குப் பசி எடுத்துச் சாப்பிடறதே பெரிய விஷயம்”
“உங்களுக்கு என் மீது என்ன கோபம்? ஆடம்பரமா வாழ்ந்துக்கிட்டிருக்கற ஒரு முன்னணி நடிகைய ஏன் ஆயா ஆக்குறீங்க? ஏன் இந்த விபரீத யோசனை?”
“காமத்துக்கும் மரணத்துக்கும் எதிர்மறையான தொடர்பு இருக்கு. மரணம் இருக்கிற இடத்தில் காமம் இருக்காது. மறு நாள் காலை துாக்கில் தொங்கப் போகும் கைதியோட மனசுல காம எண்ணம் வர வாய்ப்பேயில்லை. மரணத்தின் நிழல்ல ஆறுமாசம் இருந்தீங்கன்னா உங்க மனசுல இருக்கற காமம் அடங்கிரும்"
‘‘அதுக்கப்பறம் நான் ஆசைகள எல்லாம் துறந்துட்டு சந்நியாசியா வாழணுமா?’’
‘‘காமம் போயிருச்சின்னா காதல் வரும் – சரியான ஆளப் பாத்தா. உங்க மனசுல அன்பு பெருகும். அதனால நல்ல உறவுகள் கிடைக்கும். ஒரு நல்ல மனுஷனக் கல்யாணம் செஞ்சிக்கிட்டு பல வருஷங்கள் குழந்தை குட்டிங்களோட நிறைவான வாழ்க்கை வாழப்போறீங்க’’
‘‘நீங்க சொல்ற யோசனைய நான் கேக்க மறுத்தா?’’
‘‘நீங்க ஒரு மாதிரியான பாலியல் போதையில மாட்டிக்கிட்டிருக்கீங்க. அது போகப் போக இன்னும் மோசமாகி உங்கள அழிச்சிரும். உங்க உடல்நலம் பாதிக்கும். எந்த மாதிரியான நோய் எப்போ வரும்னே தெரியாது. அர்த்தமுள்ள உறவுன்னு எதுவும் இருக்காது. அன்பு காட்ட ஆளே இருக்க மாட்டாங்க. வலியோடயும் வேதனையோடயும் தனிமரமா வாழறது ஒரு வாழ்க்கையா?”
சவுமியா எழுந்து என்னை நோக்கி வந்தாள். ஆபத்தை உணர்ந்தேன்.
“நான் கிளம்பறேன்.”
நான் அந்த அறையை விட்டு ஏறக்குறைய ஓடி வந்தேன். கீழே பச்சைப்புடவைக்காரி இன்னும் அறையைக் கூட்டிக்கொண்டிருந்தாள். அவள் கால்களில் விழுந்தேன்.
“என்னாயிற்று?”
“அந்த நடிகை ஒரு பெரிய தவமியற்றப் போகிறாள். அதற்கு எந்த இடையூறும் வரக் கூடாது. அவள் தவம் நிறைவேறும்வரை அவளது கர்மக்கணக்கின் செயல்பாடுகளை நிறுத்தி வையுங்கள். அவளுக்கு நல்ல வாழ்வைக் கொடுங்கள்”
“அவளை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும்?”
“அதுதான் பெரிய ஞானத்தைக் கொடுத்துவிட்டீர்களே?”
“என்ன ஞானம்?”
“அந்த நடிகை நாத்திகவாதி. உங்களை வெறுப்பவள். அவள் மீதும் அன்புகொண்டு வாழ வைத்து விட்டீர்களே! வெறுப்பவர்களிடமே இப்படி அன்புகாட்டினால் பக்தர்களின் மீது எத்தனை அன்பு காட்டுவீர்கள்? அதைத் தாங்கும் சக்தி இந்தக் கொத்தடிமைக்கு இல்லை தாயே’’
அவள் சிரித்தபடி மறைந்துவிட்டாள். அவள் அன்பை நினைத்து அழுது கொண்டிருந்தேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar